ஆர்எஸ்எஸ் ஆதரவை பாஜக இழந்ததா?

புதுடெல்லி: ஜூன் 6- நடந்து முடிந்த மக்களவைத் தேர்தலில் ராஷ்டிரிய ஸ்வயம் சேவக்கின் (ஆர்எஸ்எஸ்) ஆதரவை பாஜக இழந்ததாகசர்ச்சை கிளம்பியுள்ளது. இதன் தொண்டர்கள் வழக்கத்துக்கு மாறாக தேர்தல் பணியிலிருந்து விலகி நின்றதாகவும் கூறப்படுகிறது.
பாஜகவின் தாய் அமைப்பான ஆர்எஸ்எஸ் கடந்த 1925, செப்டம்பர் 27-ல் உருவானது. நாடு முழுவதிலும் பரவியுள்ள இதன் தொண்டர்கள், தேர்தல் காலத்தில் பாஜகவுக்காக தீவிரப் பணியாற்றுவது வழக்கம். இவர்களது பணி நேரடியாக கட்சிக்காக இருப்பதில்லை. எனினும், தேர்தல் சூழலை இவர்கள் பாஜகவுக்கு சாதகமாக மாற்ற முயல்வது உண்டு. இதனால், நாட்டின் ஒவ்வொரு மாநிலத்திலும் பாஜக பெறும் வெற்றியின் பின்னணியில் ஆர்எஸ்எஸ் இருப்பதாகக் கருதப்படுகிறது.
தேர்தலுக்கு முன் பாஜகவின் வாக்காளர்களை ஆர்எஸ்எஸ் அடையாளம் கண்டுவிடுவது வழக்கம். இவர்களை வாக்குப்பதிவு நாளில் தேடிச் சென்று அவர்கள் வாக்கு செலுத்துவதை ஆர்எஸ்எஸ் தொண்டர்கள் உறுதிப்படுத்துவார்கள்.
தேர்தலுக்காக தனது அமைப்பின் சார்பில் பல்வேறு நிலைகளில் கூட்டங்களையும் ஆர்எஸ்எஸ் நடத்துகிறது. ஆனால் இந்தமுறை இதுபோன்ற கூட்டங்கள் எதுவும் நடந்ததாகத் தெரியவில்லை.
இது பாஜக சார்பில் தாமதமாக ஐந்தாம் கட்ட தேர்தல் சமயத்தில் கண்டறியப்பட்டது. இதன் பிறகு இரு தரப்பினரும் பேசி, சில கூட்டங்களை நடத்தி, தேர்தல் பணிகளை முடுக்கிவிட முயற்சிக்கப்பட்டது. இருப்பினும், வழக்கமான தேர்தல் பலன் பாஜகவுக்கு கிடைக்காமல் போய் விட்டது. இதன் பின்னணியில் பாஜக தேசியத் தலைவர் ஜே.பி.நட்டா கூறிய கருத்தும், பிரதமர் நரேந்திர மோடியை தனி மனிதராக கட்சியில் முன்னிறுத்தியதும் காரணமாகக் கூறப்படுகிறது.
தேர்தலுக்கு முன் பாஜக தலைவர் நட்டா அளித்த ஒரு பேட்டியில், “ஆர்எஸ்எஸ் என்பது எங்கள் கட்சியின் கொள்கைகளை அமைக்கிறது. பாஜகவின் பணி முன்பை விட அதிகமான வீரியம் பெற்றுள்ளது. இதற்கு தனது காலிலேயே நிற்கும் அளவுக்கு கட்சி முன்னேறி விட்டது” என்றுகூறியிருந்தார். இந்த கருத்தால் பாஜக மீது ஆர்எஸ்எஸ் தலைவர்கள் சற்று அதிருப்தி அடைந்ததாகக் கூறப்படுகிறது. இத்துடன், 2014 மக்களவைத் தேர்தலில் பிரதமர் வேட்பாளராக மோடி முன்னிறுத்தப்பட்டது முதல் ‘மோடி அலை’ எனும் பெயரில் அவரதுபுகழ் அதிகமாகப் பரவி வருகிறது. இதுபோல், கட்சியிலும் தனது அமைப்பிலும் எந்தவொரு தனி மனிதரும் முன்னிறுத்தப்படுவதை ஆர்எஸ்எஸ் விரும்புவதில்லை எனக் கூறப்படுகிறது. இதுபோன்ற காரணங்களால், இந்த தேர்தலில் ஆர்எஸ்எஸ் சற்று சுணக்கம் காட்டியதாக தகவல்கள் பரவி உள்ளன.