ஆர்எஸ்எஸ் பொதுச் செயலாளர் தகவல்

புதுடெல்லி, மார்ச் 19- பாஜக, விஎச்பி உள்ளிட்ட பல்வேறு அமைப்புகளின் தாய் அமைப்பாக ஆர்எஸ்எஸ் விளங்குகிறது. இந்நிலையில் ஆர்எஸ்எஸ் பிரதிநிதிகள் சபையின் 3 நாள் கூட்டம் மகாராஷ்டிர மாநிலம் நாக்பூரில் நேற்று முன்தினம் முடிவடைந்தது.கடந்த 2021-ல் ஆர்எஸ்எஸ் பொதுச் செயலாளர் ஆன தத்தாத்ரேயா ஹோசபல் இக்கூட்டத்தில் மீண்டும் தேர்வு செய்யப்பட்டார். வரும் 2027 வரை அவர் இந்தப் பொறுப்பு வகிப்பார். இந்த கூட்டத்தில் வெளியிடப்பட்ட 2023-24-க்கான ஆண்டறிக்கையில் கூறியிருப்பதாவது:நாட்டின் தற்போதைய முன்னேற்றம் ஊக்கமளிப்பதாக உள்ளது. இந்த ஆண்டு (2023-24) தங்கமான ஆண்டு என்றே நினைவுகூரப்படும். ஏனெனில், அயோத்தியில் ராமர் கோயில் திறக்கட்டுள்ளது. சந்திரயான்-3 விண்கலம் வெற்றிகரமாக நிலவில் கால்பதித்தது. ஜி20 உச்சி மாநாடு வெற்றிகரமாக நடத்தப்பட்டது என சாதனைகளை அடுக்கிக் கொண்டே போகலாம்.அதேநேரம் இந்தியா, இந்துத்துவா அல்லது சங்க் ஆகிய மூன்றையும் சீர்குலைக்க தேசவிரோத சக்திகள் புதுப்புது சதித் திட்டங்களை தீட்டி வருகின்றன. எனவே, இதுபோன்ற சதித் திட்டங்களை முறியடிக்க நாட்டு மக்கள் பெரிய அளவில் ஒன்று திரள வேண்டும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.நாக்பூர் கூட்டத்துக்கு பிறகு செய்தியாளர்களிடம் தத்தாத்ரேயா ஹோசபல் கூறும்போது, “அயோத்தி ராமர் கோயிலுக்காக நடத்தியதை போன்ற போராட்டங்கள் காசி, மதுரா கோயில்களுக்கு தேவையில்லை. அயோத்தியை போன்று அனைத்து பிரச்சினைகளையும் அணுகத் தேவையில்லை.

காசி, மதுரா விவகாரங்கள் மீதான வழக்குகள் நீதிமன்றங்களில் உள்ளன. அயோத்தியை போன்று நீதிமன்றம் மூலம் பிரச்சினைகள் முடிந்தால் போராட்டத்துக்கான அவசியம் இல்லை. விஎச்பியும், மூத்தத் துறவிகளும் இரு கோயில்களின் இடங்களை மீட்டெடுக்க வலியுறுத்துவது அதிகரித்துள்ளது. இதுபோல், இந்துக்கள் தரப்பில் அதன் அவசியத்தை அவ்வப்போது எடுத்துரைப்பதே போதுமானது” என்றார்.