ஆற்றைக் கடக்க முயன்றபோது நீரில் அடித்துச் செல்லப்பட்ட யானை

கூடலூர்: ஜூன் 28:
ஓவேலி ஆற்றை கடக்க முயன்றபோது யானை ஒன்று நீரில் அடித்து செல்லப்பட்ட காட்சி வேகமாக சமூக வலைதளங்களில் பரவி வருகிறது. அதிர்ஷ்டவசமாக அந்த யானை தண்ணீரில் இருந்து தப்பித்து வனத்துக்குள் சென்றது.
நீலகிரி மாவட்டம் கூடலூரை சுற்றியுள்ள பகுதிகளில் கடந்த மூன்று நாட்களாக தொடர்ந்து கனமழை பெய்து வருகிறது. குறிப்பாக வனப்பகுதிகளில் ஓடும் ஆறுகளில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது.
இந்நிலையில், ஓவேலி பேரூராட்சிக்கு உட்பட்ட தர்மகிரி பகுதியில் வனப்பகுதியில் உள்ள ஆற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. பெரும் பாறைகள் அதிகமாக கொண்ட அந்த ஆற்றினை கடப்பதற்காக மூன்று யானைகள் நின்ற நிலையில் ஒவ்வொன்றாக ஆற்றைக் கடக்க முயற்சி செய்தன.
அப்போது முன்புறமாக வந்த பெண் யானையை ஆற்று வெள்ள நீரில் அடித்து சொல்லப்பட்டது. சுமார் 300 மீட்டர் தண்ணீரில் அடித்து செல்லப்பட்ட நிலையில் சிறிது தூரத்தில் பாறைகள் அதிகமாக இருந்த நிலையில், அதனை பயன்படுத்திக் கொண்ட பெண் யானை தட்டு தடுமாறி வெள்ளத்திலிருந்து தப்பி கரைக்கு சென்றது.
அந்தப் பகுதியில் இரண்டு நாட்களாக யானைகள் நடமாடிய நிலையில் அந்தப் பகுதிக்கு சென்ற இளைஞர்கள் சிலர் நேற்று எடுத்த அந்த ஒளிப்பதிவு காட்சி தற்போது வெளியாகி பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. ஆற்றில் அடித்து செல்லப்பட்ட யானை காட்சியை உறுதிப்படுத்திய வனத்துறையினர் தற்போது அந்த பகுதியில் கண்காணிக்கும் பணியில் ஈடுபட்டு உள்ளனர்.