ஆலப்புழாவில் மீனவர்களுடன் கலந்துரையாடிய ராகுல் காந்தி

திருவனந்தபுரம், செப் 19-
காங்கிரஸ் கட்சியின் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி இந்தியா முழுவதும் ஒற்றுமை யாத்திரை மேற்கொண்டுள்ளார். கன்னியாகுமரியில் கடந்த 7-ந் தேதி தொடங்கிய ராகுல் காந்தியின் பாதயாத்திரை 11-ந் தேதி முதல் கேரளாவில் நடந்து வருகிறது. நேற்று ஆலப்புழா புன்னப்புராவில் தங்கி இருந்த அவர் இன்று 12-வது நாளாக காலை 6.30 மணிக்கு அங்கிருந்து பாதயாத்திரை தொடங்கினார். அவருடன் கேரள மாநில காங்கிரஸ் நிர்வாகிகள், தொண்டர்கள் பங்கேற்றனர். பாதயாத்திரை தொடங்கும் முன்பு ராகுல் காந்தி ஆலப்புழா வடக்கால் கரையில் உள்ள மீனவர்களை சந்தித்து பேசினார். அப்போது கேரளாவில் மீனவர்கள் சந்திக்கும் பிரச்சினைகள், அவர்களுக்கு உள்ள சவால்கள் குறித்து கேட்டறிந்தார்
மேலும் பெட்ரோல், டீசல் விலை உயர்வு காரணமாக ஏற்பட்டுள்ள சிக்கல், குறைக்கப்பட்ட மானியம், இதனால் ஏற்பட்டுள்ள இழப்புகள் குறித்தும் அவர் விவாதித்தார். அதன்பின்பு மீண்டும் பாதயாத்திரையை தொடங்கிய ராகுல் காந்திக்கு வழி நெடுக மக்கள் உற்சாக வரவேற்பு அளித்தனர். ஆலப்புழா புன்னப்புராவில் தொடங்கிய பாத யாத்திரை பகல் 11 மணி அளவில் செரிய கலவூர் பகுதியில் நிறைவடைகிறது. அங்கு பாதயாத்திரை குழுவினர் ஓய்வெடுக்கிறார்கள். அதன்பின்பு மாலை 4.30 மணிக்கு மீண்டும் பாதயாத்திரை தொடங்குகிறது. இரவு 7 மணிக்கு மயித்ரா சென்றடைகிறது.
பின்னர் சேர்தலாவில் உள்ள புனித மைக்கேல் கல்லூரியில் அவர் தங்குகிறார்.