ஆளுங்கட்சியே அமளியில் ஈடுபடுகிறதுமுதல்-மந்திரி குற்றச்சாட்டு

ராய்ப்பூர், மார்ச் 18-
நாடாளுமன்றத்தில் பட்ஜெட் கூட்டத்தொடரின் 2-வது அமர்வு கடந்த 13-ந்தேதி தொடங்கி தொடர்ந்து நடந்து வருகிறது. எனினும், கடந்த 5 நாட்களாக இரு அவைகளிலும் ராகுல் காந்தி மற்றும் தொழிலதிபர் அதானி விவகாரம் ஆகியவற்றை ஆளும், எதிர்க்கட்சி உறுப்பினர்கள் பேசி, கோஷங்களையும் எழுப்பினர். இதனால், தொடர்ந்து அவை நடவடிக்கைகள் ஒத்தி வைக்கப்படும் சூழல் ஏற்பட்டது. இதேபோன்று, 5-வது நாளான நேற்றும் அவை கூடியதும், இங்கிலாந்து நாட்டில் ராகுல் காந்தி பேசிய விவகாரம் பற்றி ஆளுங்கட்சியும், தொழிலதிபர் அதானி விவகாரத்தில் நாடாளுமன்ற கூட்டு குழு விசாரணை வேண்டும் என வலியுறுத்தி எதிர்க்கட்சியினரும் கோஷம் எழுப்பி அமளியில் ஈடுபட்டனர்.
இரு அவைகளிலும் தொடர் அமளியால் அவை நடவடிக்கைகள் நாள் முழுவதும் ஒத்தி வைக்கப்பட்டன. நாடாளுமன்றத்திற்கு வெளியேயும், பா.ஜ.க. மற்றும் காங்கிரஸ் உறுப்பினர்கள் மோதி கொள்ளும் வகையில், ஒருவருக்கு ஒருவர் கடுமையாக தாக்கி பேசி கொண்டனர். இந்த நிலையில், சத்தீஷ்கார் முதல்-மந்திரி பூபேஷ் பாகல் கூறும்போது, அதானியுடன் பிரதமரின் வெளிநாட்டு பயணம், துணை நிறுவனங்கள் மற்றும் எல்.ஐ.சி. பணம் இழப்பு ஆகியவை பற்றி காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி, நாடாளுமன்றத்தில் எழுப்பிய கேள்விகளுக்கு பதிலளிக்க மத்திய அரசு விரும்பவில்லை. நாங்கள் அவையில் எழுப்பிய இந்த விவகாரத்தில் இருந்து மக்களின் கவனம் திசை திரும்ப வேண்டும் என்பதற்காக, நாடாளுமன்றத்தில் அவர்களே அமளியில் ஈடுபடுவதும், குழப்பம் ஏற்படுத்தியும் வருகின்றனர் என கூறியுள்ளார். ஆளுங்கட்சி ஒன்று நாடாளுமன்றத்தின் இரு அவைகளிலும் கூச்சல், குழப்பம் ஏற்படுத்தி அவை நடவடிக்கைகள் நடைபெறாமல் அமளியில் ஈடுபடுவது இதுவே முதன்முறையாகும் என்றும் அவர் குற்றச்சாட்டாக கூறியுள்ளார்.

https://www.dailythanthi.com/News/India/for-the-first-time-in-parliament-the-ruling-party-is-involved-in-aamili-chhatishkar-chief-minister-allegation-922293