ஆவணி திருவிழா தேரோட்டம்: திரளான பக்தர்கள் பங்கேற்பு

திருச்செந்தூர் ஆக.26 – முருகப்பெருமானின் அறுபடை வீடுகளில் இரண்டாம் படை வீடான திருச்செந்தூர் சுப்பிரமணியசாமி கோவிலில் ஆவணி திருவிழா கடந்த 17-ந் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கி நடைபெற்று வந்தது. விழாவில் ஒவ்வொரு நாளும் காலை, மாலை வேளையில் சுவாமியும், அம்பாளும் தனித்தனி சப்பரத்தில் எழுந்தருளி பக்தர்களுக்கு அருள்பாலித்து வந்தனர். 5-ம் திருவிழா அன்று இரவு 7.30 மணிக்கு குடைவரைவாயில் தீபாராதனையும், 7-ம் திருவிழா அன்று அதிகாலை உருகு சட்ட சேவையும், காலை 9 மணிக்கு சுவாமி சண்முகர் வெற்றிவேர் சப்பரத்தில் எழுந்தருளல், மாலை 4.30 மணிக்கு சிவப்பு சாத்தி கோலத்தில் வீதி உலா, 8-ம் திருவிழா காலையில் வெள்ளை சாத்தி கோலத்தில் வெள்ளை மலர்களால் அலங்கரிக்கப்பட்ட சப்பரத்தில் சுவாமி சண்முகர் எழுந்தருளி வீதி உலாவும், சுவாமி சண்முகர் பச்சை சாத்திக்கோலத்தில் எழுந்தருளி வீதி உலாவும் நடைபெற்றது.
விழாவின் சிகர நிகழ்ச்சியான 10-ம் திருவிழாவான இன்று காலை 5 மணிக்கு கோவில் நடை திறக்கப்பட்டது. 5.30 மணிக்கு விஸ்வரூப தரிசனம் தொடர்ந்து உதய மார்த்தாண்ட அபிஷேகமும், தேரோட்டம் நடைபெற்றது.
விழாவுக்கான ஏற்பாடுகளை கோவில் தக்கார் கண்ணன் ஆதித்தன், மண்டல இணை ஆணையர் அன்புமணி (கூடுதல் பொறுப்பு) மற்றும் கோவில் பணியாளர்கள் செய்திருந்தனர்.