ஆ.ராசாவுக்கு மிரட்டல் பிஜேபி தலைவர் அதிரடி கைது

கோவை: செப்டம்பர். 21 – தி.மு.க. துணை பொதுச் செயலாளரும், நீலகிரி தொகுதி எம்.பி.யுமான ஆ.ராசா, இந்துக்கள் குறித்து சர்ச்சைக்குரிய கருத்து தெரிவித்ததாக கூறப்படுகிறது. இதனை கண்டித்து தமிழகம் முழுவதும் இந்து அமைப்பினர் போராட்டம் நடத்தி வருகின்றனர். நேற்று நீலகிரி பாராளுமன்ற தொகுதியில் இந்து முன்னனணி சார்பில் கடையடைப்பு போராட்டம் நடந்தது. கடந்த 2 நாட்களுக்கு முன்பு ஆ.ராசா எம்.பி.யின் பேச்சை கண்டித்து கோவை பிளமேடு புதூர் பகுதியில் இந்து முன்னணி சார்பில் பொதுக்கூட்டம் நடந்தது. இதில் கோவை மாவட்ட பா.ஜ.க தலைவர் பாலாஜி உத்தமராமசாமி கலந்து கொண்டு பேசினார்.
அப்போது அவர் ஆ.ராசா மற்றும் தி.மு.க.வினர் குறித்து சர்ச்சைக்குரிய வகையிலும், மிரட்டும் தொனியிலும் பேசியதாக கூறப்படுகிறது. இது தொடர்பான வீடியோக்களும் சமூக வலைதளங்களில் வைரலானது. இதையடுத்து பீளமேடு போலீசார் தாமாக முன்வந்து பா.ஜ.க மாவட்ட தலைவர் பாலாஜி உத்தமராமசாமி மீது கலவரத்தை தூண்டும் வகையில் பேசுதல், அமைதியை சீர்குலைக்கும் வகையில் பேசுதல், இரு பிரிவினரிடையே மோதலை ஏற்படுத்தும் வகையில் பேசுதல் உள்ளிட்ட 3 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்தனர். இதுதொடர்பாக அவரிடம் விசாரணை நடத்துவதற்காக இன்று அதிகாலை பீளமேடு போலீசார் அவரை அவினாசி ரோட்டில் உள்ள பீளமேடு போலீஸ் நிலையத்திற்கு அழைத்து வந்தனர். அங்கு வைத்து அவரிடம் விசாரணை நடத்தினர். விசாரணையின் முடிவில் கோவை மாவட்ட பா.ஜ.க தலைவர் பாலாஜி உத்தமராமசாமியை கைது செய்தனர்.
இந்த தகவல் கோவை மாவட்ட பா.ஜ.க.வினரிடையே வேகமாக பரவியது. இதையடுத்து பெண்கள் உள்பட 50-க்கும் மேற்பட்ட பா.ஜ.க.வினர் பீளமேடு போலீஸ் நிலையத்தில் குவிந்தனர். அவர்கள் போலீஸ் நிலையத்திற்குள் நுழைய முயன்றனர். ஆனால் அவர்களை உள்ளே நுழைய விடாமல் போலீசார் தடுப்புகளை வைத்து அடைத்து தடுத்து நிறுத்தினர். இதனால் போலீசாருக்கும், பா.ஜ.க.வினருக்கும் இடையே தள்ளுமுள்ளு ஏற்பட்டது. அப்போது பா.ஜ.க.வினர் பாலாஜி உத்தமராமசாமியை கைது செய்யக்கூடாது என கோஷங்கள் எழுப்பினர். இதற்கிடையே போலீசார் பாலாஜி உத்தமராமசாமியை கோர்ட்டில் ஆஜர்படுத்துவதற்காக காரில் ஏற்றி அழைத்து செல்ல முயன்றனர்.
இதை பார்த்த பா.ஜ.க.வினர் அந்த காரை அங்கிருந்து செல்ல விடாமல் தடுத்ததுடன், காரின் மீதும் ஏறி அமர்ந்து கொண்டனர். இதையடுத்து போலீசார் அவர்களை காரில் இருந்து குண்டுக்கட்டாக தூக்கி அப்புறப்படுத்தினர். அப்போது மீண்டும் போலீசாருக்கும், பா.ஜ.க.வினருக்கு இடையே வாக்குவாதம் ஏற்பட்டது. ஆத்திரம் அடைந்த பா.ஜ.கவினர் நேராக போலீஸ் நிலையத்தின் எதிரே உள்ள அவினாசி சாலையில் அமர்ந்து சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். மேலும் அந்த வழியாக வந்த தனியார் பஸ் மற்றும் வாகனங்களையும் மறித்து போராட்டத்தில் ஈடுபட்டனர். இதையடுத்து போலீசார் இங்கிருந்து கலைந்து செல்லவில்லை என்றால் உங்களையும் கைது செய்ய வேண்டி இருக்கும் என எச்சரித்தனர். இதையடுத்து அவர்கள் அங்கிருந்து கலைந்து சென்றனர். பா.ஜ.க.வினரின் சாலைமறியல் காரணமாக அவினாசி சாலையில் கடும் போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது. இதனால் காலையில் வேலைக்கு செல்வோரும், பள்ளி செல்லும் குழந்தைகளும் பாதிப்படைந்தனர்.