இங்கிலாந்தில் லாரி ஓட்டுநர்கள் பற்றாக்குறை – பெட்ரோல், டீசலுக்கு கடும் தட்டுப்பாடு

லண்டன், செப். 30- கடந்த ஜனவரி மாதம் ஐரோப்பிய ஒன்றியத்தை விட்டு இங்கிலாந்து வெளியேறியது. இதன் பின்னர் இங்கிலாந்தில் டேங்கர் லாரி ஓட்டுனர்களுக்கு பற்றாக்குறை ஏற்பட்டுள்ளது. கொரோனா ஊரடங்கினால் பல மாதங்களாக ஓட்டுநர் பயிற்சி பள்ளிகள் மூடப்பட்டிருந்தது இந்த பிரச்சனையை மேலும் தீவிரமாக்கியுள்ளது. வெளிநாடுகளில் இருந்து இறக்குமதி செய்யப்படும் எரிபொருள், துறைமுகங்களில் இருந்து நாடு முழுவதும் உள்ள பெட்ரோல் பங்குகளுக்கு டேங்கர் லாரிகள் மூலம் பெட்ரோல், டீசல் அனுப்பபடுகிறது. ஆனால், டேங்கர் லாரி ஓட்டுநர்களுக்கு கடும் பற்றாக்குறை ஏற்பட்டுள்ளதால், பல இடங்களில் பெட்ரோல் விநியோகம் தடைபட்டுள்ளது. பெட்ரோல் பங்குகளில் பெட்ரோல் நிரப்ப நீண்ட வரிசையில் கார்கள் மற்றும் இதர வாகனங்கள் காத்திருக்கின்றன. சில இடங்களில் பெட்ரோல் பங்குகள் மூடப்பட்டுள்ளன. மேலும் உணவு பொருட்கள் உள்ளிட்ட இதர பண்டங்களின் விநியோகத்தையும் ஓட்டுநர்கள் பற்றாக்குறை, பாதிக்கும் என்று கருதப்படுகிறது. டேங்கர் ஓட்டுனர்கள் பற்றாகுறையை சமாளிக்க வெளிநாடுகளைச் சேர்ந்த டேங்கர் ஓட்டுநர்களுக்கு, 5,000 தற்காலிக விசாக்களை அளிக்க இங்கிலாந்து அரசு திட்டமிட்டுள்ளதாகவும் தகவல்கள் வெளியாகின. இந்த நிலையில் ராணுவ வீரர்களைக் கொண்டு விரைவில் டேங்கர் லாரிகள் இயக்கப்படும் என்று அந்நாட்டு அரசு அறிவித்துள்ளது. எனவே மக்கள் யாரும் பீதியடைந்து தேவைக்கு அதிகமாக பெட்ரோலை வாங்கி சேமித்து வைக்க வேண்டாம் என இங்கிலாந்து அரசு கேட்டுக்கொண்டுள்ளது.