இங்கிலாந்துக்கு பதிலடி கொடுக்குமா இந்தியா?

கயானா: ஜூன் 27- ஐசிசி டி 20 கிரிக்கெட் உலகக் கோப்பை தொடரில் இன்று இரவு 8 மணிக்கு மேற்கு இந்தியத் தீவுகளில் உள்ள கயானாவில் நடைபெறும் 2-வது அரை இறுதி ஆட்டத்தில் இந்திய அணி, நடப்பு சாம்பியனான இங்கிலாந்துடன் மோதுகிறது.
இரு அணிகளும் கடைசியாக டி 20 உலகக் கோப்பையில் கடந்த 2022-ம் ஆண்டு தொடரின் அரை இறுதி போட்டியில் மோதி இருந்தன. ஆஸ்திரேலியாவின் அடிலெய்டு மைதானத்தில் நடைபெற்ற அந்த ஆட்டத்தில் 169 ரன்கள் இலக்கை துரத்திய இங்கிலாந்து அணி 24 பந்துகளை மீதம் வைத்து 10 விக்கெட்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றிருந்தது.
ஜாஸ்பட்லர் 80, அலெக்ஸ் ஹேல்ஸ் 86 ரன்கள்விளாசியிருந்தனர். இந்த தோல்விதான் டி 20 கிரிக்கெட்டில் இந்திய அணியின் வியூகத்தை முழுமையாக மறுபரிசீலனை செய்ய கட்டாயப்படுத்தியது. இதன் ஒரு கட்டமாகவே பேட்டிங்கில் பழமைவாத முறையில் இருந்து ஆக்ரோஷத்திற்கு இந்திய அணி மாறியது. 19 மாதங்களுக்குப்பிறகு தற்போது டி 20 உலகக் கோப்பை தொடரின் அரை இறுதியில் இரு அணிகளும் மீண்டும் சந்திக்கின்றன.
இம்முறை ரோஹித் சர்மா தலைமையிலான இந்திய அணி பேட்டிங்கில் அனுபவம் வாய்ந்த வீரர்களை கொண்டுள்ளது. டாப் ஆர்டர் மற்றும் நடுவரிசை, பின் வரிசையில் அதிரடியாக விளையாடக்கூடிய பேட்ஸ்மேன்கள் உள்ளனர். மேலும்பந்து வீச்சிலும் தாக்கத்தை ஏற்படுத்தக்கூடிய வீரர்கள் இருப்பது கூடுதல் பலமாக உள்ளது.
நடப்பு தொடரில் இந்திய அணி விளையாடிய அனைத்து ஆட்டங்களிலும் வெற்றி கண்டுள்ளது. லீக் சுற்றில் கனடா அணிக்கு எதிரானஆட்டம் மட்டுமே மழை காரணமாக ரத்தாகியிருந்தது. சூப்பர் 8 சுற்றில் வங்கதேசம், ஆப்கானிஸ்தான், ஆஸ்திரேலிய அணிகளை வீழ்த்தி குரூப்1-ல் முதலிடம் பிடித்து அரை இறுதியில் கால்பதித்துள்ளது. பேட்டிங்கை பொறுத்தவரையில் விராட் கோலி மற்றும் ஷிவம் துபே ஆகியோரது பார்ம் மட்டுமே கவலை அளிக்கும் வகையில் உள்ளது. இவர்கள் இருவரிடம் இருந்தும் எதிர்பார்த்தஅளவிலான மட்டை வீச்சு வெளிப்படவில்லை.
எனினும் இன்றைய ஆட்டம் முக்கியத்துவம் வாய்ந்தது என்பதால் விராட் கோலி ரன் குவிப்பதில் கூடுதல் கவனம் செலுத்தக்கூடும். ஆடுகளம் சுழலுக்கு கைகொடுக்கும் பட்சத்தில் ஷிவம்துபேவிடம் இருந்து பெரிய அளவிலான ரன்குவிப்பு வெளிப்படக்கூடும். ரிஷப் பந்த், சூர்யகுமார் யாதவ் ஆகியோரும் தாக்குதல் ஆட்டம்தொடுத்தால் இங்கிலாந்து அணியின் பந்து வீச்சுதுறைக்கு கூடுதல் அழுத்தம் கொடுக்கலாம். ஆஸ்திரேலியாவுக்கு எதிரான ஆட்டத்தில் 41 பந்துகளில் 92 ரன்கள் விளாசிய ரோஹித் சர்மாவிடம் இருந்து மீண்டும் ஒரு சிறந்த செயல் திறன் வெளிப்படக்கூடும்.
நடப்பு சாம்பியனான இங்கிலாந்து அணி தடுமாறியே நாக் அவுட் சுற்றில் நுழைந்தது. லீக் சுற்றில் ‘பி’ பிரிவில் இடம் பெற்றிருந்த அந்த அணி ஸ்காட்லாந்துக்கு எதிராக மோதிய ஆட்டம் மழையால் ரத்தானது. அடுத்த ஆட்டத்தில் பரமவைரியான ஆஸ்திரேலியாவிடம் 36 ரன்கள்வித்தியாசத்தில் தோல்வி கண்டது.
இதன் பின்னர் கத்துகுட்டிகளான ஓமன், நமீபியாவை தோற்கடித்தது. எனினும் ஆஸ்திரேலியா தனது கடைசி ஆட்டத்தில் ஸ்காட்லாந்தை வீழ்த்தியதன் காரணமாகவே இங்கிலாந்து அணிக்கு சூப்பர் 8 சுற்று வாய்ப்பு கிடைத்தது.
சூப்பர் 8 சுற்றில் மேற்கு இந்தியத் தீவுகள் அணியை 8 விக்கெட்கள் வித்தியாசத்தில் வீழ்த்திய இங்கிலாந்து அணியானது அடுத்த ஆட்டத்தில் தென் ஆப்பிரிக்காவிடம் 7 ரன்கள் வித்தியாசத்தில் அதிர்ச்சி தோல்வி அடைந்தது. தொடர்ந்து கடைசி ஆட்டத்தில் அமெரிக்காவை 10 விக்கெட்கள் வித்தியாசத்தில் வீழ்த்தியது. இந்த சுற்றில் இங்கிலாந்து அணியை அடுத்த கட்டத்துக்கு முன்னேறச் செய்ததில் தென் ஆப்பிரிக்க அணி முக்கிய பங்குவகித்தது. ஏனெனில்அந்த அணி தனது கடைசி ஆட்டத்தில் மேற்குஇந்தியத் தீவுகளை வீழ்த்தியது. இதன் காரணமாக குரூப் 2-ல் இங்கிலாந்து அணி 2-வது இடம் பிடித்து அரை இறுதியில் நுழைந்தது.
பந்து வீச்சை பொறுத்தவரையில் இந்திய அணி லீக் சுற்றில் வேகப்பந்து வீச்சை பிரதான ஆயுதமாக பயன்படுத்தியது. அதேவேளையில் சூப்பர் 8 சுற்றில் 3 வேகப்பந்து வீச்சாளர்கள், 3 சுழற்பந்து வீச்சாளர்கள் கலவையுடன் விளையாடி வெற்றிகளை தொடர்ந்தது. முகமது சிராஜுக்கு பதிலாக சேர்க்கப்பட்ட குல்தீப் யாதவ் சூப்பர் 8 சுற்றில் 7 விக்கெட்கள் வீழ்த்தி அசத்தினார். தொடக்க மற்றும் இறுதிக்கட்ட ஓவர்களில் ஜஸ்பிரீத் பும்ரா, அர்ஷ்தீப் சிங் ஆகியோர் தாக்கத்தை ஏற்படுத்தக்கூடிய அளவிலான செயல் திறனை வெளிப்படுத்தி வருகின்றனர்.
இவர்கள் இங்கிலாந்து அணியின் பேட்டிங் வரிசைக்கு அழுத்தம் கொடுக்கக்கூடும். ஆல்ரவுண்டராக ஹர்திக் பாண்டியா சிறந்த பங்களிப்பை வழங்கி வருகிறார். அக்சர் படேல், ரவீந்திர ஜடேஜா ஆகியோரும் பந்து வீச்சில் கைகொடுத்து வருகின்றனர். கயானா மைதானம்சுழற்பந்து வீச்சுக்கு சாதகமாக இருக்கும் என்பதால் இன்றைய ஆட்டத்தில் யுவேந்திர சாஹலுக்கு இடம் கிடைக்க வாய்ப்பு உள்ளது.
இங்கிலாந்து அணியின் பேட்டிங் வரிசையில் ஜாஸ் பட்லர் பார்முக்கு திரும்பி உள்ளார். அவர், அமெரிக்காவுக்கு எதிரான ஆட்டத்தில் 38 பந்துகளில் 83 ரன்கள் விளாசியிருந்தார். மற்றொரு தொடக்க வீரரான பில் சால்ட்டும் சிறந்த பார்மில் உள்ளார். இந்த ஜோடி இந்திய அணியின் பந்து வீச்சு துறைக்கு அச்சுறுத்தல் கொடுக்கக்கூடும். ஜானி பேர்ஸ்டோ, ஹாரி புரூக், மொயின் அலி, லியாம் லிவிங்ஸ்டன், சேம் கரண் ஆகியோரும் பேட்டிங்கில் நம்பிக்கை அளிக்கக்கூடியவர்கள்.
பந்து வீச்சை பொறுத்தவரையில் சூப்பர் 8 சுற்றில் இங்கிலாந்து அணி 4 வேகப்பந்து வீச்சாளர்கள், 3 சுழற்பந்து வீச்சாளர்களை பயன்படுத்தியது. ரீஸ் டாப்லி, ஜோப்ரா ஆர்ச்சர், கிறிஸ் ஜோர்டான், சேம் கரண், மார்க்வுட் ஆகியோர் வேகப்பந்து வீச்சிலும் ஆதில் ரஷித், மொயின் அலி ஆகியோர் சுழற்பந்து வீச்சிலும் பலம் சேர்க்கக்கூடியவர்களாக திகழ்கின்றனர். பகுதி நேர சுழற்பந்து வீச்சாளராக லியாம் லிவிங்ஸ்டனும் சிறந்த பங்களிப்பை வழங்கக்கூடியவர். அநேகமாக இன்றைய ஆட்டத்தில் லியாம் லிவிங்ஸ்டனுக்கு பதிலாக வில் ஜேக்ஸ் களமிறங்கக்கூடும். சுழற்பந்து வீசும் திறன் கொண்ட இவர், மட்டை வீச்சில் சுழலுக்கு எதிராக தாக்குதல் ஆட்டம் மேற்கொள்ளக்கூடியவர்.மைதானம் ஜார்ஜ்டவுனின் புறநகர் பகுதியில் டெமராரா ஆற்றின் கரையில் அமைந்துள்ளது.நடப்பு உலகக் கோப்பை தொடரில் கயானாவில் 6-வது போட்டி நடைபெற உள்ளது. லீக் சுற்றில் குரூப் ‘சி’ ஆட்டங்கள் அனைத்தும் இங்குதான் நடத்தப்பட்டது. இதில் சுழற்பந்து வீச்சாளர்கள் மைதானத்தில் திறம்பட செயல்பட்டனர். அதேவேளையில் வேகப்பந்து வீச்சாளர்களுக்கும் ஆடுகளம் உதவியது. ஐந்து ஆட்டங்களில் அதிகபட்சமாக உகாண்டாவுக்கு எதிராக ஆப்கானிஸ்தான் 5 விக்கெட்கள் இழப்புக்கு 183 ரன்கள் குவித்திருந்தது.