இங்கிலாந்து வேகப்பந்து வீச்சாளர் சாம்கரன் பேட்டி

மெல்போர்ன், நவ. 14-ஆஸ்திரேலியாவில் நடைபெற்ற டி20 உலகக் கோப்பை இறுதி ஆட்டத்தில் பாகிஸ்தானை 5 விக்கெட் வித்தியாசத்தில் வீழ்த்திய இங்கிலாந்து அணி சாம்பியன் பட்டம் வென்றது. இந்த போட்டியின் பாகிஸ்தான் அணிக்கு எதிராக 4 ஓவர்கள் வீசி 12 ரன்கள் மட்டுமே விட்டுக்கொடுத்து 3 விக்கெட்களை கைப்பற்றிய இங்கிலாந்து வேகப்பந்து வீச்சாளர் சாம்கரன் ஆட்ட நாயகனாக தேர்வு செய்யப்பட்டார். மேலும் உலகக்கோப்பை தொடர் முழுவதும் சிறப்பாக பந்துவீசி 13 விக்கெட்களை வீழ்த்தியதற்காக தொடர் நாயகன் விருதும் அவருக்கு வழங்கப்பட்டது. சாம்கரன் இந்தியாவில் நடைபெறும் ஐ.பி.எல். போட்டிகளில் பஞ்சாப் கிங்ஸ் மற்றும் சென்னை சூப்பர் கிங்ஸ் அணிகளுக்காக விளையாடி உள்ளார். விருதை பெற்ற பின்னர் பேட்டி அளித்த அவர் கூறியுள்ளதாவது: ஐபிஎல் போட்டிகளில் விளையாடிய அனுபவம், அங்கிருந்து கற்றுக் கொண்ட விஷயங்கள் மிகவும் உதவியாக இருந்தது. நான் அங்கு (இந்தியாவில்) இருந்த நாட்களை நேசித்தேன். அவர்களிடம் இருந்து நிறைய கற்றுக் கொண்டேன். இத்தகைய பெரிய தொடர்கள்(உலகக்கோப்பை), பல போட்டிகளில் விளையாடிய வீரர்களிடம் இருந்து கற்றுக்கொண்டது அற்புதமான தருணம். நான் எப்பொழுதும் கற்றுக்கொள்கிறேன், என்னை மேம்படுத்தவும் முயற்சிக்கிறேன். ஐபிஎல் போட்டிகளில் மீண்டும் விளையாட வருவேன் என்று நம்பிக்கையுடன் இருக்கிறேன். இவ்வாறு அவர் தெரிவித்தார்.