இடமாற்றம் செய்ய பரிசீலனை

பெங்களூரு: ஜூன் 10 – கர்நாடக முதல்வர் சித்தராமையா நேற்று பெங்களூருவில் செய்தியாளர்களிடம் பேசுகையில், ‘’நெரிசல் மரணங்கள் தொடர்பாக எனக்கே தாமதமாகத்தான் தகவல் தெரிவிக்கப்பட்டது. அதாவது 3.15 மணிக்கு சம்பவம் தொடர்பான செய்திகள் வெளியான நிலையில் எனக்கு மாலை 5.45 மணிக்குத்தான் தகவல் கிடைத்தது.
இவ்வளவு பெரிய கூட்டம் வரும் என்று யாரும் என்னிடம் தெரிவிக்கவில்லை. அதன் காரணமாகவே உளவுத் துறை அதிகாரிகள் பணி இடைநீக்கம் செய்யப்பட்டு உள்ளன‌ர். இந்த சம்பவம் வருத்தமளிக்கிறது.
இதில் அரசு நிர்வாகம் எந்த தவறும் செய்யவில்லை. குற்றவாளிகள் மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
கிரிக்கெட் ஸ்டேடியம் நகரின் மைய பகுதியில் இருப்பதால் அடிக்கடி போக்குவரத்து நெரிசல் ஏற்படுகிறது. எனவே சின்னசாமி கிரிக்கெட் ஸ்டேடிய‌த்தை வேறு இடத்துக்கு மாற்றுவது குறித்து பரிசீலனை செய்யப்படும்.
மகா கும்பமேளாவில் மக்கள் இறந்தபோது உத்தரப் பிரதேச முதல்வ‌ர் ராஜினாமா செய்தாரா? அப்போது பாஜகவும், மஜதவும் அவரை ஏன் ராஜினாமா செய்யச் சொல்லவில்லை?’’ என கேள்வி எழுப்பினார்.