இடிந்து விழுந்த 2 மாடி கட்டிடம் 3 குழந்தைகள் பலி

காசியாபாத், செப்.24-
உத்திர பிரதேச மாநிலத்தின் காசியாபாத் மாவட்டத்தை அடுத்த லோனி பகுதியில் இருந்த இரண்டு மாடிகள் கொண்ட வீட்டின் கட்டிடம் இடிந்து விழுந்ததில், மூன்று குழந்தைகள் உயிரிழந்தனர். மேலும் ஏழு பேர் பலத்த காயமுற்றனர்.
இடிந்து விழுந்த வீட்டை அதன் உரிமையாளர் வாடகைக்கு விட்டிருந்ததாக தெரிகிறது. வீட்டில் வாடகைக்கு எடுத்து தங்கியிருந்தவர், அதில் சட்டவிரோதமாக பட்டாசு தயாரிப்பு ஆலையை நடத்தி வந்ததாக கூறப்படுகிறது. இதில் ஏற்பட்ட விபத்து காரணமாகவே வீடு இடிந்து விழுந்துள்ளது.
குடியிருப்பு பகுதியில் வீடு இடிந்து விழுந்த சத்தத்தை கேட்டு அங்கு விரைந்த அக்கம்பக்கத்தினர், இடிபாடுகளில் சிக்கியிருந்தவர்களை மீட்கும் பணிகளில் ஈடுபட்டனர். மேலும், இந்த சம்பவம் தொடர்பாக போலீசாருக்கும் தகவல் தெரிவித்தனர்.
சம்பவ இடத்திற்கு விரைந்துவந்த போலீசாருடன், தேசிய பேரிடர் மீட்பு படையினர், மீட்பு பணிகளில் ஈடுபட்டனர். நான்கு மணி நேர போராட்டத்திற்கு பிறகு, மீட்பு படையினர் இடிபாடுகளில் சிக்கியிருந்த ஏழு பேரை மீட்டனர். மீட்கப்பட்ட ஏழு பேரும் கடுமையாக காயமுற்றனர் என்று காவல் துறை சார்பில் தெரிவிக்கப்பட்டு இருக்கிறது.