இண்டியா கூட்டணி குறித்து பிஜேபி கடும் விமர்சனம்

இவா, மார்ச் 8- மாநிலத்தில் வடக்கு கோவா, தெற்கு கோவா என 2 மக்களவை தொகுதிகள் உள்ளன. கடந்த 2019-ம்ஆண்டு மக்களவைத் தேர்தலில், பாஜக வடக்கு கோவாவையும், காங்கிரஸ் தெற்கு கோவாவையும் கைப்பற்றியது.
இந்நிலையில் இண்டியா கூட்டணியில் இடம்பெற்றுள்ள காங்கிரஸ், ஆம் ஆத்மி, கோவா பார்வர்டு கட்சி, சிவசேனா (உத்தவ் அணி), தேசியவாத காங்கிரஸ் (சரத்பவார் அணி) ஆகிய கட்சிகளின் மூத்த தலைவர்கள் கோவாவில் கடந்த புதன் கிழமை சந்தித்து பேசினர். கோவாவில் மக்களவைத் தேர்தலுக்கான வியூகங்களை வகுக்க ஒருங்கிணைப்பு குழுவை உருவாக்க வேண்டும் என அவர்கள் முடிவு செய்தனர்.இது குறித்து கோவா பாஜக செய்தி தொடர்பாளர் யதீஷ் நாயக் கூறுகையில், ‘‘இண்டியா கூட்டணி தலைவர்கள் கோவாவில் சந்தித்து பேசிய சில மணி நேரத்தில், பஞ்சாப் சட்டப்பேரவையில் காங்கிரஸ் மற்றும் ஆம் ஆத்மி கட்சியினர் இடையே வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது. நிராகரிக்கப்பட்ட வாரிசு கட்சிக்கு புத்துயிர் அளிக்க எதிர்க்கட்சி கூட்டணி கவனம் செலுத்துகிறது.
கோவா பாஜக எம்எல்ஏ சங்கல்ப் அமோங்கர் கூறுகையில், ‘கோவாவில் காங்கிரஸ் கட்சிக்கு எதிர்காலம் இல்லை. கோவா காங்கிரஸ் தலைவர் அமித் பட்கர் தனி குழுவை உருவாக்கி காங்கிரஸ் கட்சிக்கு முடிவு கட்டிவிட்டார். காங்கிரஸ் மூத்த தலைவர்களை எல்லாம் காங்கிரஸ் கட்சி ஓரம்கட்டுகிறது’’ என்றார்.