இத்தாலியில் மோடிக்கு உற்சாக வரவேற்பு

ரோம், ஜூன் 14:
அமெரிக்கா, இங்கிலாந்து, பிரான்ஸ், இத்தாலி, ஜெர்மனி, கனடா, ஜப்பான் ஆகிய முன்னேறிய நாடுகள், ஜி-7 என்ற அமைப்பாக செயல்படுகின்றன. ஆண்டுதோறும் இந்த அமைப்பின் மாநாடு நடப்பது வழக்கம்.தலைமை பொறுப்பு வகிக்கும் நாடு, பிற நாடுகள் மற்றும் சர்வதேச அமைப்புகளின் தலைவர்களையும் மாநாட்டுக்கு அழைப்பது வழக்கம். அதுபோல், இந்த ஆண்டு தலைமை பொறுப்பை ஏற்று மாநாட்டை நடத்தும் இத்தாலி, இந்தியா உள்பட 12 வளரும் நாடுகளின் தலைவர்களுக்கு அழைப்பு விடுத்துள்ளது. இதையேற்று இத்தாலி புறப்பட்ட இந்திய பிரதமர் நரேந்திர மோடி அந்நாட்டின் பிரிண்டிசி விமான நிலையம் சென்றடைந்தார்.
அங்கு அவருக்கு உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது. இரண்டு நாட்கள் நடைபெறும் ஜி7 உச்சி மாநாட்டை ஒட்டி பிரதமர் நரேந்திர மோடி உலக தலைவர்களை சந்தித்து பேச்சுவார்த்தை நடத்த இருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது. 3வது முறையாக பிரதமராக பதவியேற்ற பின் முதல் பயணமாக இத்தாலி சென்றுள்ளார். இத்தாலியில் அபுலியா பிராந்தியத்தில் உள்ள ஒரு சொகுசு விடுதியில் 13ம் தேதி முதல் 15-ந் தேதி வரை இந்த மாநாடு நடக்கிறது. ஜி7 உச்சி மாநாட்டில் இந்திய பிரதமர் மோடி தவிர அமெரிக்க அதிபர் ஜோ பைடன், பிரான்ஸ் அதிபர் இமானுவேல் மேக்ரான், ஜப்பான் பிரதமர் புமியோ கிஷிடா. கனடா பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ உள்ளிட்டோர் கலந்து கொள்கின்றனர்.