இத்தாலி பிரதமர் கணவர் சர்ச்சை பேச்சு

ரோம், செப்.1- இத்தாலியின் பிரதமராக இருப்பவர் ஜார்ஜியா மெலோனி. கடந்த ஆண்டு அக்டோபரில் நடந்த தேர்தலில் வெற்றி பெற்று பிரதமராக தேர்ந்தெடுக்கப்பட்டார். இவரது கணவர் ஆண்டிரியா கியாம்புருனோ. இவர் தொலைக்காட்சியில், டெய்லி டைரி என்ற பெயரிலான நிகழ்ச்சி ஒன்றை நடத்தினார். அதில், அவர் பேசியது பெரும் சர்ச்சையை கிளப்பியுள்ளது.சிசிலி நகரில் பாலர்மோ பகுதியில் இளம்பெண் ஒருவர் கும்பல் பலாத்காரம் செய்யப்பட்டது அந்நாட்டினர் இடையே அதிர்ச்சி ஏற்படுத்தி இருந்தது. இந்நிலையில், கியாம்புருனோ அந்த நிகழ்ச்சியில் பேசும்போது, நீங்கள் நடனம் ஆட சென்றால், குடிப்பதற்கான ஒவ்வோர் உரிமையும் உங்களுக்கு இருக்கிறது. எந்தவித தவறான புரிதலும் இருக்க கூடாது. எந்தவித பிரச்சனையும் இருக்க கூடாது.
ஆனால், நீங்கள் மதுபானம் குடிப்பது மற்றும் உணர்வை இழப்பது ஆகியவற்றை தவிர்த்து விட்டால், சில பிரச்சனைகளில் சிக்காமல், ஓநாய் ஒன்றின் முன் நீங்கள் வராமல் தவிர்க்கலாம் என பேசினார்.இதற்கு எதிர்க்கட்சியை சேர்ந்த சில அரசியல்வாதிகள் கடும் கண்டனம் தெரிவித்துள்ளனர். இளம்பெண்கள் எச்சரிக்கையுடன் இருக்க வேண்டும் என போதிப்பதற்கு பதிலாக, இளம் ஆடவர்களுக்கு மரியாதையை வெளிப்படுத்துவது பற்றி கற்று தர வேண்டும் என்று கியாம்புருனோவுக்கு நான் கூறி கொள்கிறேன். ஒப்புதலுக்கான மதிப்பை அவர்களுக்கு (ஆண்கள்) கற்று கொடுங்கள் என எதிர்க்கட்சியை சேர்ந்த செசிலியா டிஎலியா கூறியுள்ளார். எனினும், இதுபற்றி மெலோனி எதுவும் தெரிவிக்கவில்லை.