இந்தியாவின் வளர்ச்சி8% ஆக உயர வாய்ப்பு

புதுடெல்லி: ஜூன் 15 நடப்பு நிதி ஆண்டில் இந்தியாவின் ஜிடிபி வளர்ச்சி 8 சதவீதமாக உயர வாய்ப்புள்ளதாக இந்திய தொழிலக கூட்டமைப்பு (சிஐஐ) தெரிவித்துள்ளது. சென்ற நிதி ஆண்டுடன் ஒப்பிடுகையில் நடப்பு நிதி ஆண்டில் வேளாண் துறையின் செயல்பாடு மேம்பட்டு இருப்பதால், இந்தியாவின் வளர்ச்சி விகிதம் அதிகரிக்க வாய்ப்பு இருப்பதாக சிஐஐ குறிப்பிட்டுள்ளது.
இது குறித்து சிஐஐ தலைவர் சஞ்சய் பூரி கூறுகையில், “வேளாண் துறையை எடுத்துக் கொண்டால் அத்துறையின் வளர்ச்சி சென்ற நிதி ஆண்டில் 1.4 சதவீதமாக இருந்தது. பருவநிலை சாதகமாக உள்ளதால் நடப்பு நிதி ஆண்டில் அது 3.7 சதவீதமாக உயர வாய்ப்புள்ளது.அதேபோல், தொழில்துறை 8.4 சதவீத அளவிலும் சேவைத் துறை 9 சதவீத அளவிலும் உயர வாய்ப்புள்ளது. இதன் நீட்சியாக நடப்பு நிதி ஆண்டில் இந்தியாவின் பொருளாதார வளர்ச்சி 8 சதவீதமாக உயரும் என்று எதிர்பார்க்கிறோம்.இந்தியாவில் முதலீடும் நுகர்வும் சிறப்பாக உள்ளது. மத்திய அரசின் உற்பத்தியோடு இணைந்த ஊக்கத்தொகைத் திட்டத்தால் மின்னணு சாதன தயாரிப்பு, உணவு பதப்படுத்தல், தொலைத் தொடர்பு உள்ளிட்ட துறைகள் வளர்ச்சி அடைந்து வருகின்றன. அதேபோல் லாஜிஸ்டிக்ஸ், ஆட்டோமொபைல், செமிகண்டக்டர் உள்ளிட்ட துறைகளில் தனியார் முதலீடு அதிகரித்து வருகிறது. இது நாட்டின் பொருளாதார வளர்ச்சிக்கு உந்துதலாக உள்ளன” என்று தெரிவித்தார்.