இந்தியாவின் வெற்றியை வீதிகளில் கொண்டாடி தீர்த்த ரசிகர்கள்

புதுடெல்லி,செப்.12- நடப்பு ஆசிய கோப்பை கிரிக்கெட் தொடரின் சூப்பர்-4 சுற்றில் பாகிஸ்தான் அணியை 228 ரன்கள் வித்தியாசத்தில் வென்றுள்ளது ரோகித் சர்மா தலைமையிலான இந்திய அணி. இந்த வெற்றியை இந்திய ரசிகர்கள் பட்டாசு வெடித்து கோலாகலமாக நாட்டின் பல்வேறு முக்கிய நகரங்களின் வீதிகளில் கொண்டாடினர்.
இலங்கையின் கொழும்பில் நடைபெற்ற இந்தப் போட்டியில் ரோகித் சர்மா மற்றும் சுப்மன் கில், அரைசதம் பதிவு செய்தனர். கோலி மற்றும் கே.எல்.ராகுல், சதம் பதிவு செய்து அசத்தினர். சுழற்பந்து வீச்சாளர் குல்தீப் யாதவ், 5 விக்கெட்களை கைப்பற்றி இருந்தார். இப்படி இந்திய அணிக்கு இந்தப் போட்டியில் நிறைய சாதகங்கள் அமைந்தது குறிப்பிடத்தக்கது. இது அபார வெற்றி என பிசிசிஐ துணைத் தலைவர் ராஜீவ் சுக்லா தெரிவித்துள்ளார்.
வெற்றிக் கொண்டாட்டம்: இந்தியாவின் இந்த அபார வெற்றியை இந்தியாவில் உள்ள முக்கிய நகரங்களை சேர்ந்த மக்கள் பட்டாசு வெடித்தும், ‘இந்தியா.. இந்தியா’ என முழக்கமிட்டும், மூவர்ண கொடியுடனும் கொண்டாடினர். மேற்கு வங்க மாநிலம் சிலிகுரி, குஜராத் மாநிலத்தில் சூரத் நகரம், உத்தர பிரதேச மாநிலத்தின் மொராதாபாத், மகாராஷ்டிராவின் நாசிக் மற்றும் நாக்பூரிலும் ரசிகர்கள் இந்திய அணியின் வெற்றியை கொண்டாடினர். இந்த கொண்டாட்டத்தின்போது சிலர் நடனமாடியும் இருந்தனர்.