இந்தியாவில் கள்ள நோட்டு அதிகரிப்பு ரிசர்வ் வங்கி அதிர்ச்சி தகவல்

மும்பை : நாட்டில் கள்ள நோட்டுகளின் எண்ணிக்கை அதிகரித்து உள்ளதாக கூறியுள்ள ரிசர்வ் வங்கி குறிப்பாக 500 ரூபாய் கள்ள நோட்டுக்கள் 2 மடங்காக அதிகரித்துள்ளதாக தெரிவித்துள்ளது. கடந்த 2016ம் ஆண்டு உயர் மதிப்புகளை கொண்ட 500 மற்றும் 1000 ரூபாய் நோட்டுகள் மதிப்பு இழந்ததாக பிரதமர் மோடி அறிவித்தார். உயர் மதிப்புள்ள நோட்டுகளால் தான் ஊழல், கறுப்புப் பணம், கள்ளநோட்டு புழக்கம் போன்ற மோசடிகள் நடப்பதாக கூறிவிட்டு அதை விட அதிக மதிப்புள்ள 2000 ரூபாய் நோட்டுக்கள் வெளியிடப்பட்டது சர்ச்சையானது. பணமதிப்பு இழப்பு நடவடிக்கை தோல்வி அடைந்ததாக பொருளாதார நிபுணர்கள் கூறி வந்த நிலையில், அதனை உறுதி செய்யும் வகையில் கள்ளநோட்டுகளின் எண்ணிக்கை அதிகரித்துள்ளது. அதன் எதிரொலியாகவே 2000 ரூபாய் நோட்டுக்கள் அச்சடிப்பதை ரிசர்வ் வங்கி படிப்படியாக குறைத்து வருகிறது. இந்த நிலையில் ரிசர்வ் வங்கி வெளியிட்டுள்ள அறிக்கையின் படி,2021ம் ஆண்டு வங்கிகளால் கண்டுபிடிக்கப்பட்ட 500 ரூபாய் கள்ள நோட்டுகளின் எண்ணிக்கை 39,453 ஆக இருந்தது. 2022ம் ஆண்டில் 500 ரூபாய் கள்ள நோட்டுகளின் எண்ணிக்கை இரு மடங்காக அதிகரித்து அதாவது 101.9%உயர்ந்து 70,666 என்ற எண்ணிக்கையை தொட்டது. 2000 ரூபாய் கள்ள நோட்டுகளின் எண்ணிக்கை 8,798ல் இருந்து 54% உயர்ந்து 13,604 ஆக தொட்டுள்ளது. அதே சமயம் 2000 ரூபாய் நோட்டுக்கள் அச்சடிப்பது குறைக்கப்பட்டு இருப்பதால் அதன் எண்ணிக்கை 1.6% குறைந்துள்ளது.

அதற்கு நேர் மாறாக கடந்த ஆண்டு 3,867 கோடி என்ற எண்ணிக்கையில் அச்சடிக்கப்பட்ட 500 ரூபாய் நோட்டுக்களின் எண்ணிக்கை இந்த ஆண்டில் 4,554 ஆக உயர்த்தப்பட்டுள்ளது. இதனிடையே 200,100, 50,10 ரூபாய் கள்ள நோட்டுக்கள் அச்சடிப்பது குறைந்து இருப்பதாக டதெரியவந்துள்ளது.