இந்தியாவில் கொரோனா பாதிப்பு உயரவில்லை

புதுடெல்லி, ஜன. 10-சீனாவில் கடந்த மாதம் மீண்டும் வேகமாக பரவிய உருமாறிய ஒமைக்ரான் வைரசின் புது வடிவமாக பிஎப்.7 வகை தொற்றால் கடந்த சில நாட்களாக, தினந்தோறும் பல்லாயிரக்கணக்கானோர் பாதிக்கப்பட்டு வருகின்றனர். இதேபோல அமெரிக்கா, தென்கொரியா உள்ளிட்ட சில நாடுகளிலும் கொரோனாவில் புதிய திரிபுகள் மீண்டும் பாதிப்பை அதிகரிக்க செய்தன. இதனால் இந்தியாவிலும் கண்காணிப்பு மற்றும் பரவல் தடுப்பு நடவடிக்கைகள் தீவிரப்படுத்தப்பட்டன.
குறிப்பாக, சீனாவில் கொரோனா புதிய அலை உருவானால் அடுத்த 3 வாரங்களுக்கு பிறகு இந்தியாவில் பரவல் அதிகரிக்க வாய்ப்பு கூடும் என்பதால் விமான நிலையங்களில் கண்காணிப்பை தீவிரப்படுத்துமாறு அனைத்து மாநிலங்களுக்கும் மத்திய சுகாதார அமைச்சகம் அறிவுறுத்தியது.மேலும், பொதுஇடங்களில் முககவசம் அணிவது உள்ளிட்ட சில விழிப்புணர்வு நடவடிக்கைகளையும் மேற்கொள்ள வலியுறுத்தியது. இதையடுத்து சீனா உள்பட பரவல் மீண்டும் அதிகரித்த நாடுகளில் இருந்த வந்த பயணிகளுக்கு விமான நிலையங்களில் தொற்று பரிசோதனை செய்யப்பட்டது. இந்நிலையில், சீனாவில் தொற்று பரவல் அதிகரித்த 3 வாரங்களுக்குப் பிறகும், இந்தியாவில் தொற்று பரவல் அதிகரிப்பதற்கான எந்த அறிகுறியும் இல்லை என்பது சுகாதாரத்துறை புள்ளி விபரங்களில் உறுதியாகி உள்ளது. கடந்த ஞாயிற்றுக்கிழமையுடன் முடிவடைந்த வாரத்தில் இந்தியாவில் புதிய பாதிப்பு, 2 வாரங்களுக்குப் பிறகு ஓரளவு சரிவைக் கண்டுள்ளது. அதாவது புதிய பாதிப்பு எண்ணிக்கை மிகவும் குறைவாகவே உள்ளது. இந்தியாவில் கடந்த வாரத்தில் மட்டும் தொற்றால் 1,268 பேர் புதிதாக பாதிக்கப்பட்டுள்ளனர். இது முந்தைய வாரத்தில் 1,526 ஆக இருந்தது.