
டெல்லி, ஜூன் 9- இந்தியாவில் டெஸ்லா உற்பத்தி ஆலையை விரைவில் நிறுவ இருப்பதாக எலான் மஸ்க் தரப்பில் தகவல்கள் வெளியாகியிருந்தன. ஆனால், டிரம்புடன் மோதல் போக்கு நீடித்து வருவதால், இந்த ஆலையை அமைக்க முடியாமலேயே போகலாம் என்று சொல்லப்படுகிறது.டிரம்புக்கு பக்க பலமாக இருந்த எலான் மஸ்க், விரைவில் அரசின் முக்கிய பொறுப்புகளுக்கும் உயர்ந்தார்.
எனவே எலான் மஸ்குக்கு கைமாறாக, அவரது நிறுவனங்களுக்கு சலுகைகளும், நிதி உதவியும் வழங்கப்படும் என்று எதிர்பார்க்கப்பட்டது. குறிப்பாக இந்தியாவில் டெஸ்லா உற்பத்தி ஆலையை அமைப்பதற்கு மேற்கொள்ளப்படும் முயற்சிகளுக்கும் டிரம்ப் உதவியாக இருப்பார் என்று சொல்லப்பட்டது. ஆனால் இப்போது இருவருக்கும் இடையில் கருத்து வேறுபாடு ஏற்பட்டிருப்பதால் இந்தியாவில் டெஸ்லா உற்பத்தி ஆலைகள் வரலாமலேயே போகலாம் என்று தகவல்கள் வெளியாகியுள்ளன.
இது குறித்து முன்னதாக பேசியிருந்த டிரம்ப், “டெஸ்லா நிறுவனம் இந்தியாவில் தொழிற்சாலையை அமைத்தால் அது அமெரிக்காவிற்கு செய்யும் துரோகம்” என்று விமர்சித்திருந்தார்.
இந்த ஸ்டேட்மென்ட்டை அவர் கொடுத்தபோது, எலான் மஸ்க்கும், அவருக்கும் இடையில் எந்த பிரச்சனையும் ஏற்பட்டிருக்கவில்லை. எனவே இதை பலரும் பெரிய விஷயமாக எடுத்துக்கொள்ளவில்லை. ஏனெனில் ஆப்பிள் நிறுவனம் இந்தியாவில் உற்பத்தியை அதிகரிக்க திட்டமிட்டிருந்தபோதும், டிரம்ப் இதே பாணியில்தான் எதிர்ப்பு தெரிவித்திருந்தார். ஆனால் சிக்கல் என்னவெனில், இப்போது டிரம்புக்கும்,
எலான் மஸ்க்குக்கும் இடையில் ஏழாம் பொருத்தம் ஏற்பட்டிருப்பதால் உண்மையிலேயே டெஸ்லா நிறுவனத்தின் உற்பத்தி ஆலை இந்தியாவில் அமைய முடியாமல் போகலாம். இந்த கருத்துக்கு ஆதரவு சேர்க்கும் விதமாக பல சம்பவங்கள் நடந்திருக்கின்றன. டெஸ்லாவின் பங்கு சந்தை மதிப்பு 15% வரை குறைந்திருக்கிறது.
இதனால் 150 பில்லியன் அமெரிக்க டாலர் வைரை மஸ்க் இழந்திருக்கிறார். போதாத குறைக்கு சீனாவின் BYD போன்ற நிறுவனங்கள், மின்சார கார் உற்பத்தியில் சக்கை போடு போட்டு வருகின்றன. இதனால் உலக அளவில் டெஸ்லா காருக்கான மவுசு குறைந்திருக்கிறது. இந்த சூழலில் இந்தியாவில் டெஸ்லா உற்பத்தி ஆலை அமைவதற்கான ஒப்பந்த எதிர்பார்த்தபடி போடப்படாது என்று சொல்லப்படுகிறது