இந்தியாவை முந்திய ஆப்பிரிக்க நாடுகள்

மதுரை: பிப்.14- புதிய ரகங்கள் இல்லாதது, தரம் குறைந்தரோஜாப் பூக்கள் உற்பத்தியால் வெளிநாட்டுஏற்றுமதியில் இந்தியாவை, ஆப்பிரிக்க நாடுகள் முந்தியுள்ளன. காதலர் தினத்தை முன்னிட்டு உள்நாட்டு சந்தைகளிலும் ரோஜாக்களுக்கு பெரிய வரவேற்பு கிடைக்கவில்லை.
திண்டுக்கல், ஓசூர், உதகை போன்ற இடங்களில் ரோஜாப் பூக்கள் சாகுபடி செய்யப்படுகின்றன. இதில் 95 சதவீதம் ஓசூரிலும், மீதி 5 சதவீதம் மற்ற 2 இடங்களிலும் நடக்கிறது.
காதலர் தினத்தில் ரோஜாப் பூக்களுக்கு சர்வதேச சந்தைகள் முதல் உள்ளூர் சந்தைகள் வரை பெரும் வரவேற்பு கிடைக்கும். அதனால், ஓசூர் உள்பட தமிழகத்தில் இருந்து ஒரு கோடி ரோஜா மலர்களுக்கு மேல் ஏற்றுமதியாகும். ஆனால், நடப்பாண்டு காதலர் தினத்தை முன்னிட்டு ரோஜாப் பூக்களுக்கு கடந்த காலங்களைப்போல பெரும் வரவேற்பு இல்லை.
இதுகுறித்து அகில இந்திய மலர்கள் உற்பத்தியாளர்கள் கவுன்சில் இயக்குநர் பாலசிவ பிரசாத் கூறியதாவது: சர்வதேச அளவில் நெதர்லாந்து, கொலம்பியா, கென்யா, எத்தியோப்பியா, கென்யா, ஈக்வேடார் மற்றும் சீனாவில் ரோஜா உற்பத்தி அதிகமாக உள்ளது. ஆப்பிரிக்க நாடுகளில் 50 முதல் 100 ஏக்கரில் ரோஜாப் பூக்கள் சாகுபடி செய்யப்படுகின்றன.
நெதர்லாந்தில் ரோஜாப் பூக்களுக்கான சர்வதேச சந்தை உள்ளது. சீனாவின் புத்தாண்டு தினம் கடந்த 10-ம் தேதி நடந்தது. அங்கு உற்பத்தியாகும் பூக்கள், அந்நாட்டின் புத்தாண்டு கொண்டாட்டத்துக்கே போதுமானதாக உள்ளதால், அவர்கள் பெரிய அளவில் வெளிநாடுகளுக்கு ஏற்றுமதி செய்ய மாட்டார்கள். தற்போது இந்தியாவில் புதிய ரகங்கள் இல்லாமை, தரம் குறைந்த உற்பத்தி போன்றவற்றால் வெளிநாட்டு ஏற்றுமதி குறைந்துள்ளது.
தற்போது விவசாயிகளிடம் இருந்து வியாபாரிகள் ஸ்டம்புடன் (நீண்ட காம்பு) கூடிய ரோஜாவை ரூ.10 முதல் ரூ.13-க்குவாங்கி, ரூ.60 முதல் ரூ.100 வரை தரத்துக்கு ஏற்ப விற்கிறார்கள். அதுவே ஏற்றுமதிதரத்துக்கு ரூ.16 முதல் ரூ.18 வரை கொடுக்கிறார்கள்.