இந்தியா அபார வெற்றி – தொடரையும் கைப்பற்றி அசத்தல்

தரோபா, ஆக. 2: இந்தியா – வெஸ்ட் இண்டீஸ் அணிகள் இடையிலான 3-வது மற்றும் கடைசி ஒருநாள் கிரிக்கெட் போட்டி டிரினிடாட்டின் தரோபாவில் உள்ள பிரையன் லாரா ஸ்டேடியத்தில் நேற்று நடந்தது. இந்திய அணியில் ரோகித் சர்மா, விராட் கோலிக்கு மீண்டும் ஓய்வு அளிக்கப்பட்டது. இதே போல் அக்ஷர் பட்டேல், உம்ரான் மாலிக் நீக்கப்பட்டு அவர்களுக்கு பதிலாக ருதுராஜ் கெய்க்வாட், ஜெய்தேவ் உனட்கட் சேர்க்கப்பட்டனர்.
டாஸ்’ ஜெயித்த வெஸ்ட் இண்டீஸ் கேப்டன் ஷாய் ஹோப் முதலில் இந்தியாவை பேட்டிங் செய்ய பணித்தார். இதன்படி இஷான் கிஷனும், சுப்மன் கில்லும் இந்திய அணியின் தொடக்க ஆட்டக்காரர்களாக களம் புகுந்தனர். இஷான் கிஷன் 9 ரன்னில் வழங்கிய மிக சுலபமான கேட்ச் வாய்ப்பை கேசி கர்டி வீணடித்தார். பொன்னான வாய்ப்பை கெட்டியாக பிடித்து கொண்ட கிஷன் வேகமாக ரன் சேர்ப்பதில் கவனம் செலுத்தினார். கில்லும் ஏதுவான பந்துகளை எல்லைக்கோட்டுக்கு தெறிக்கவிட ஸ்கோர் மளமளவென உயர்ந்தது. ஜோசப், ஷெப்பர்டு ஓவர்களில் சிக்சர் விளாசி தனது 6-வது அரைசதத்தை கிஷன் எட்டினார். சிறிது நேரத்தில் சுப்மன் கில்லும் 6-வது அரைசதத்தை கடந்தார்.