இந்தியா-அமெரிக்கா இருதரப்பு வர்த்தகம் வரலாறு காணாத உச்சம்

புதுடெல்லி, நவ. 11- அமெரிக்க-இந்தியா பொருளாதார மற்றும் நிதி கூட்டாண்மையில் பங்கேற்பதற்காக அமெரிக்க நிதி மந்திரி ஜேனட் யெல்லன் இந்தியாவிற்கு வந்துள்ளார். நொய்டாவில் உள்ள மைக்ரோசாப்ட் இந்தியா மேம்பாட்டு மையத்தில் மந்திரி ஜேனட் யெல்லன் வணிகத் தலைவர்களை சந்தித்தார். இன்று நடைபெற்ற நிகழ்ச்சியில் கலந்துகொண்ட அவர் பேசியதாவது:- அமெரிக்காவின் நிதி மந்திரியாக நான் இந்தியாவுக்கு வருவது இதுவே முதல்முறை. இந்தியா சுதந்திரம் அடைந்து 75வது ஆண்டை கொண்டாடும் வேளையில் நான் இங்கு இருப்பதில் மகிழ்ச்சி அடைகிறேன்.அமெரிக்காவின் இன்றியமையாத கூட்டாளிகளில் இந்தியாவும் ஒன்று என அமெரிக்க ஜனாதிபதி ஜோ பைடன் கூறினார். உலகில் வேகமாக வளர்ந்து வரும் பெரிய பொருளாதாரங்களில் இந்தியாவும் ஒன்றாக இருப்பது ஆச்சரியமல்ல.கொரோனா பெருந்தொற்றுநோய், உக்ரைனில் ரஷிய அதிபர் புதினின் காட்டுமிராண்டித்தனமான போர் மற்றும் பொருளாதார இறுக்கநிலை ஆகியவற்றால் ஏற்பட்டுள்ள நீடித்த விளைவுகளை நாம் இப்போது கையாள்கிறோம். உக்ரைனில் ரஷியாவின் போருக்குப் பிறகு, மில்லியன் கணக்கான மக்கள் கடுமையான வறுமை மற்றும் பசியை எதிர்கொள்கின்றனர். இது போர் நடத்துவதற்கான காலம் அல்ல என பிரதமர் மோடி கூறியது சரிதான். கடினமான நேரங்கள் நம்மைச் சோதிக்கின்றன, ஆனால் சவால்கள் இந்தியாவையும் அமெரிக்காவையும் முன்பை விட நெருக்கமாகக் கொண்டுவருகின்றன என்று நான் நம்புகிறேன். இந்தியா-அமெரிக்க உறவு தொடர்ந்து வளர்ந்து வருகிறது.