இந்தியா இந்த உலகுக்கு யுத்தத்தை அல்ல; புத்தரை கொடுத்துள்ளது

வியன்னா: ஜூலை 11: “இந்தியா இந்த உலகுக்கு புத்தரைக் கொடுத்துள்ளது. யுத்தத்தை அல்ல. இந்தியா எப்போதுமே இவ்வுலகுக்கு அமைதியையும், வளத்தையுமே நல்கியுள்ளது. அதனால் 21-ம் நூற்றாண்டில் உலக அரங்கில் தனது பங்களிப்பை இந்தியா வலுப்படுத்தவிருக்கிறது” என்று பிரதமர் நரேந்திர மோடி பேசியுள்ளார்.
பிரதமர் மோடி 2 நாள் ரஷ்ய பயணத்தை முடித்துவிட்டு, அங்கிருந்து நேற்று (ஜூலை 10) ஆஸ்திரியாவுக்கு புறப்பட்டுச் சென்றார். விமானம் மூலம் ஆஸ்திரியா சென்ற பிரதமர் மோடிக்கு விமான நிலையத்தில் உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது. இதனைத் தொடர்ந்து ஆஸ்திரியா பிரதமர் கார்ல் நெகம்மரை இந்திய பிரதமர் மோடி சந்தித்தார். தொடர்ந்து பல்வேறு விவகாரங்கள் குறித்து இருநாட்டு தலைவர்களும் ஆலோசித்தனர்.
பின்னர் ஆஸ்திரியா தலைநகர் வியன்னாவில் இந்திய வம்சாவளியினரிடையே பிரதமர் நரேந்திர மோடி பேசினார்.
அங்கே பிரதமர் மோடி பேசியதாவது: இந்தியா மிகப்பெரிய இலக்குகளை எட்டி உயரிய மைல்கல்களைத் தொடுவதில் சிறப்பாக, பிரகாசமாக இயங்கி வருகிறது. ஆயிரமாயிரம் ஆண்டுகளாக நாங்கள் எங்களின் அறிவாற்றலையும், நிபுணத்துவத்தை பகிர்ந்து கொண்டு வருகிறோம். நாங்கள் உலகுக்கு யுத்தத்தை அல்ல; புத்தரைக் கொடுத்துள்ளோம். அந்த வகையில் இந்தியா எப்போதும் அமைதியையும், வளத்தையும் இத்தேசத்துக்கு வழங்கியுள்ளது. அதனால், இந்தியா 21-ம் நூற்றாண்டில் தனது பங்களிப்பை வலுப்படுத்தவிருக்கிறது.
41 ஆண்டு கால நீண்ட இடைவெளிக்குப் பின்னர் இந்தியப் பிரதமர் ஆஸ்திரியாவுக்கு வந்துள்ளது முக்கியத்துவம் வாய்ந்தது. இந்தியா – ஆஸ்திரியா 75 ஆண்டு கால நட்பைக் கொண்டாடும் தருணத்தில் இந்தப் பயணம் அமைந்துள்ளது.
இந்தியாவும், ஆஸ்திரியாவும் பூகோள ரீதியாக இருவேறு இடங்களில் இருக்கலாம். ஆனால் ஜனநாயகப் பண்புகள் நம் இரு தேசங்களையும் ஒன்றிணைக்கிறது. சுதந்திரம், சமத்துவம், பன்முகத்தன்மை, சட்டத்தின் மீதான மரியாதை போன்ற ஜனநாயக மதிப்பீடுகளை நாம் பகிர்ந்து கொள்கிறோம். நமது சமூகங்கள் பல கலாசாரங்களையும், பல மொழிகளையும் கொண்டவையாக உள்ளன. இரு தேசங்களும் பன்முகத்தன்மையை கொண்டாடுகின்றன.இந்தியாவில் நடந்த தேர்தல், உலகம் முழுவதும் உள்ள மக்களை ஆச்சரியத்தில் ஆழ்த்தியுள்ளது. சில வாரங்களுக்கு முன் நடந்த இந்திய பொதுத் தேர்தலில் 650 மில்லியனுக்கும் அதிகமான மக்கள் வாக்களித்துள்ளனர். கற்பனை செய்து பாருங்கள். இவ்வளவு பெரிய தேர்தல் நடந்தும், சில மணி நேரங்களுக்குள் தேர்தல் முடிவுகள் தெளிவாகத் தெரிந்துவிட்டது.இதுதான் எங்கள் தேர்தல் அமைப்பு மற்றும் எங்கள் ஜனநாயகத்தின் பலம். இந்தியாவில் நூற்றுக்கணக்கான அரசியல் கட்சிகளைச் சேர்ந்த 8000-க்கும் மேற்பட்ட வேட்பாளர்கள் இந்த தேர்தலில் போட்டியிட்டனர். பன்முகத்தன்மை கொண்ட இந்த போட்டிக்குப் பிறகுதான் மக்கள் தங்கள் ஆணையை வழங்கினர். 60 ஆண்டுகளுக்குப் பிறகு ஒரு அரசாங்கம் தொடர்ந்து மூன்றாவது முறை இந்தியாவில் ஆட்சி செய்யும் வாய்ப்பை பெற்றுள்ளது.