இந்தியா இலங்கை உறவு பாதிக்கும்- நிபுணர்கள் எச்சரிக்கை

டெல்லி, ஏப். 2- கச்சத்தீவு விவகாரத்தில் மத்திய அரசு தனது நிலைப்பாட்டை மாற்றினால் இந்தியா – இலங்கை இடையேயான உறவு பாதிக்கப்படும் என முன்னாள் வெளியுறவுத்துறை அதிகாரிகள் எச்சரித்துள்ளனர். தமிழ்நாட்டில் வரும் 19ம் தேதி மக்களவை தேர்தல் வாக்குப்பதிவு நடைபெறவுள்ள நிலையில், 1974ம் ஆண்டு போடப்பட்ட கச்சத்தீவு ஒப்பந்த விவகாரத்தை பாஜக கையில் எடுத்துள்ளது. ஆனால் 10 ஆண்டுகளாக ஆட்சியில் உள்ள பாஜக கச்சத்தீவை மீட்க எந்தவொரு நடவடிக்கையும் எடுக்காமல் இருந்துவிட்டு தற்போது மக்களை திசைதிருப்ப முயற்சிப்பதாக எதிர்க்கட்சிகள் குற்றம்சாட்டி வருகின்றனர். இந்நிலையில், கச்சத்தீவு ஒப்பந்தத்தில் இந்தியா தனது நிலைப்பாட்டை மாற்ற நினைத்தால் அது எதிர்விளைவுகளை ஏற்படுத்தும் என்று இலங்கைக்கான முன்னாள் தூதர் சிவசங்கர் மேனன் எச்சரித்துள்ளார். கச்சத்தீவு ஒப்பந்தத்தை மீண்டும் கையில் எடுப்பது என்பது இந்தியாவின் தலைமை மீதும் நாட்டின் மீதான நம்பிக்கை மீதும் பெரும் பாதிப்பை ஏற்படுத்தும் என்றும் அவர் தெரிவித்துள்ளார். மேலும் முந்தைய அரசின் நிலைப்பாட்டை பிரதமர் மோடி கேள்விக்குறியாக்கினால் தற்போதைய அரசு மேற்கொண்டுள்ள ஒப்பந்தங்களை அடுத்து வரும் அரசுகள் மறு ஆய்வு செய்வதை தடுக்க முடியாது என்று சிவசங்கர் மேனன் சுட்டிக்காட்டியுள்ளார். பழைய ஒப்பந்தங்களை மறு ஆய்வு செய்யும் அரசின் முடிவு மோசமான உதாரணமாக அமையும் என்று மற்றொரு முன்னாள் தூதர் அசோக் காந்தா கூறியுள்ளார். இத்தகைய செயல்பாடுகள் அண்டைய நாடுகளுடன் இந்தியா கொண்ட உடன்பாடுகள் அனைத்திலும் மிகப்பெரிய பாதிப்புகள் ஏற்படுத்தும் என்று அவர் எச்சரித்துள்ளார். 2022ம் ஆண்டு வரை கச்சத்தீவு விவகாரத்தில் முந்தைய அரசின் நிலைப்பாட்டை ஆதரிப்பதாக பாஜக அரசு கூறியுள்ளதாகவும், கச்சத்தீவை மீட்பது இயலாத ஒன்று என்று நீதிமன்றத்திலும் மத்திய அரசு தெரிவித்துள்ளதாகவும் இலங்கைக்கான முன்னாள் தூதர் நிருபமா ராவ் சுட்டிக்காட்டியுள்ளார். மேலும் 2017ம் ஆண்டு கச்சத்தீவு குறித்து பதில் அளித்த அப்போதைய வெளியுறவுத்துறை இணை அமைச்சர் தி.கே.சிங், கச்சத்தீவில் மீன் பிடிப்பதால் தமிழக மீனவர்கள் கைது செய்வதில்லை என்றும் எல்லை தாண்டி செல்வதாலேயே கைது செய்யப்படுவதாகவும் விளக்கம் அளிப்பதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.