இந்தியா உலகின் 3-வது பெரிய பொருளாதார நாடாக மாறும்

புதுடெல்லி,அக். 25- இந்தியா 2030-ம் ஆண்டில் ஜப்பானை பின்னுக்குத் தள்ளி உலகின் மூன்றாவது பெரிய பொருளாதார நாடாக மாறும் என்று சர்வதேச பொருளாதார மதிப்பீட்டு நிறுவனமான எஸ் அண்ட் பி குளோபல் தெரிவித்துள்ளது.
கடந்த ஆண்டு இந்தியா பிரிட்டனை பின்னுக்குத் தள்ளி, பொருளாதார ரீதியாக உலகின் ஐந்தாவது பெரிய நாடாக மாறியது.இந்நிலையில், அடுத்த 7 ஆண்டுகளில் 3-வது இடத்துக்கு முன்னேறும்என்று எஸ் அண்ட் பி நிறுவனம்தனது அறிக்கையில் குறிப்பிட்டுள்ளது.
ரஷ்யா – உக்ரைன் போர் காரணமாக கடந்த ஓராண்டுக்கு மேலாக சர்வதேச அளவில் பொருளாதார மந்தநிலை காணப்பட்டு வருகிறது. இந்தச் சூழலிலும் இந்தியாவின் பொருளாதாரம் மேம்பட்ட நிலையில் இருப்பதாக சர்வதேச செலாவணி நிதியம் மற்றும் உலகவங்கி போன்ற சர்வதேச அமைப்புகள் குறிப்பிட்டுள்ளன. இந்நிலையில், வரும் ஆண்டுகளிலும் இந்தியாவின் வளர்ச்சி வேகமானதாக இருக்கும் என்று எஸ் அண்ட் பி குளோபல் தெரிவித்துள்ளது.
இந்தியாவின் வளர்ச்சி குறித்துஅந்நிறுவனம் மேலும் கூறுகையில், “இந்தியாவின் ஜிடிபி 2022-ம் ஆண்டு நிலவரப்படி 3.5 டிரில்லியன் டாலராக உள்ளது. இது 2030-ம் ஆண்டில் 7.3 டிரில்லியன் டாலராக உயரும். இந்த வேகமான வளர்ச்சியின் காரணமாக அடுத்த 7 ஆண்டுகளில் இந்தியா உலகின் பெரிய பொருளாதார நாடுகளின் பட்டியலில் ஐப்பானை பின்னுக்குத் தள்ளிமூன்றாம் இடம் பிடிக்கும்.
இந்தியாவில் நடுத்தர வர்க்க மக்களின் எண்ணிக்கை அதிகரித்து வருவதால் உள்நாட்டு தேவை மிகப்பெரிய அளவில் அதிகரித்து வருகிறது. இதனால், பல்வேறு துறைசார்ந்த நிறுவனங்கள் இந்தியாவில் முதலீடு செய்ய ஆர்வம் காட்டுகின்றன. வலுவான டிஜிட்டல் கட்டமைப்பு இந்தியாவின் வளர்ச்சிக்கு முக்கிய அங்கமாக உள்ளது” என்று தெரிவித்துள்ளது.