இந்தியா கூட்டணியில் இருந்து நிதிஷ்குமார் வெளியேற காரணம் என்ன?

டெல்லி, ஜன. 30- இந்தியா’ கூட்டணியில் இருந்து நிதிஷ் குமார் விலகி உள்ளார். மேலும் அவர் பீகாரில் பாஜக ஆதரவுடன் மீண்டும் முதல்வராகி உள்ளார். இந்நிலையில் தான் நிதிஷ் குமார் இந்தியா’ கூட்டணியில் இருந்து வெளியேற ராகுல் காந்தி கூறிய வார்த்தை தான் முக்கிய காரணம் என்ற முக்கிய தகவல்கள் வெளியாகி உள்ளன. பீகாரில் தற்போது அரசியல் மாற்றம் நடந்துள்ளது. பீகாரில் நிதிஷ் குமாரின் ஜேடியூ, லாலு பிரசாத் யாதவின் ஆர்ஜேடி, காங்கிரஸ் கட்சிகள் கூட்டணி அமைத்து இருந்தன. நிதிஷ் குமார் முதல்வராக இருந்தார். இந்நிலையில் தான் நிதிஷ் குமார் திடீரென இந்த கூட்டணி ஆட்சியை கலைத்துள்ளார். முதல்வர் பதவியை நிதிஷ் குமார் ராஜினாமா செய்தார். இதையடுத்து நிதிஷ் குமார் மீண்டும் பாஜகவுடன் இணைந்தார். இதையடுத்து நிதிஷ் குமார் மீண்டும் முதல்வரானார். இதன்மூலம் பீகாரில் ஆட்சி மாற்றம் நடந்துள்ளது. நிதிஷ் குமார் கூட்டணியை முறித்து பாஜகவுடன் இணைந்ததற்கு இந்தியா’ கூட்டணி மீட்டிங்கில் நடந்த சம்பவம் தான் காரணம் என கூறப்படுகிறது. வரும் நாடாளுமன்ற தேர்தலில் பாஜகவை எதிர்க்க எதிர்க்கட்சிகளை முதன் முதலில் ஒருங்கிணைத்தவர் நிதிஷ் குமார் தான். இதனால் அவர் இந்தியா’ கூட்டணியின் ஒருங்கிணைப்பாளர் பதவி மற்றும் பிரதமர் வேட்பாளர் என்பதை எதிர்பார்த்தார். ஆனால் இந்தியா’ கூட்டணி சார்பில் இந்த இரு விஷயங்களும் நிதிஷ் குமாருக்கு வழங்கப்படவில்லை. இதனால் அதிருப்தியடைந்த நிதிஷ் குமார் இந்தியா’ கூட்டணிக்கு குட்பை’ சொல்லி பீகாரில் ஆட்சி மாற்றத்தை செய்துள்ளார்.
இந்நிலையில் தான் இந்தியா’ கூட்டணியில் இருந்து கண்டிப்பாக வெளியேற வேண்டும் என்று நிதிஷ் குமார் முடிவு செய்தது ஜனவரி 13ல் தான் எனவும், அன்றைய தினம் ராகுல் காந்தி கூறிய வார்த்தை தான் முக்கிய காரணம் என்ற தகவல் வெளியாகி உள்ளது. அதாவது இந்தியா’ கூட்டணி சார்பில் கடந்த 13ம் தேதி வீடியோ கான்பரன்சிங் மூலம் ஆலோசனை கூட்டம் நடந்தது. இந்த கூட்டத்தில் ராகுல் காந்தி, கார்கே, முதல்வர் ஸ்டாலின், நிதிஷ் குமார் உள்பட பல தலைவர்கள் பங்கேற்றனர். இந்த கூட்டணியில் இந்தியா’ ஒருங்கிணைப்பாளர் பதவி குறித்து விவாதிக்கப்பட்டது. அப்போது ராகுல் காந்தி, இதுபற்றி மம்தா பானர்ஜியுடன் ஆலோசனை நடத்திய பிறகு முடிவு எடுக்கலாம்’’ எனக்கூறினார். இந்த மீட்டிங்கில் மம்தா பானர்ஜி பங்கேற்காத நிலையில் ராகுல் காந்தியின் இந்த பதில் என்பது நிதிஷ் குமாரை கடும் அதிருப்திக்குள்ளாக்கி உள்ளது. இதனை பிற தலைவர்கள் அறிந்துள்ள நிலையில் அடுத்த சில நிமிடங்களில் ஒருங்கிணைப்பாளராக நிதிஷ் குமாரை நியமனம் செய்ய கூறியுள்ளனர். ஆனால் அவர் ஏற்க மறுத்துவிட்டுள்ளார். அதோடு மீட்டிங் முடிவதற்கு 10 நிமிடங்களுக்கு முன்பாகவே அவர் தனது இணைப்பை துண்டித்துவிட்டு சென்றுள்ளார். அன்றைய தினமே நிதிஷ் குமார் இந்தியா’ கூட்டணி மீது குறிப்பாக ராகுல் காந்தியின் பதிலால் கடும் அதிருப்திக்குள்ளாக்கி வெளியேற முடிவு செய்துள்ளதாக நிதிஷ் குமார் தரப்பினர் தெரிவித்துள்ளனர்.