இந்தியா கூட்டணி ஆட்சிக்கு வந்தால் மாதம் 10 கிலோ இலவச ரேஷன் பொருட்கள்

லக்னோ: மே 16:
நாட்டில் இந்தியா கூட்டணி ஆட்சி அமைத்தால் 10 கிலோ இலவச ரேசன் பொருட்கள் வழங்கப்படும் என்று காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜூன கார்கே தெரிவித்துள்ளார். உத்தரபிரதேச மாநிலம், லக்னோவில் காங்கிரஸ் கட்சியின் தலைவர் மல்லிகார்ஜூன கார்கே மற்றும் சமாஜ்வாடி தலைவர் அகிலேஷ் யாதவ் ஆகியோர் கூட்டாக செய்தியாளர்களை சந்தித்தனர். அப்போது பேசிய கார்கே, ‘‘நாட்டில் நான்கு கட்ட தேர்தல்கள் நடந்து முடிந்துள்ளது. இந்தியா கூட்டணி வலுவான இடத்தில் உள்ளது. நாட்டின் மக்கள் பிரதமர் மோடிக்கு வழியனுப்பு விழா கொடுப்பதற்கு தயாராகிவிட்டார்கள் என்று நான் முழு நம்பிக்கையோடு கூறுவேன். ஜூன் 4ம் தேதி இந்தியா கூட்டணி ஆட்சி அமைக்கும். பாஜ மீண்டும் ஆட்சிக்கு வந்தால் அரசியலமைப்பை மாற்றி விடுவார்கள். ஆர்எஸ்எஸ் தலைவர் மோகன் பகவத் அதனை முதலில் கூறினார்.
கர்நாடகாவில் அரசியலமைப்பை மாற்றுவதற்கு மூன்றில் இரண்டு பங்கு பெரும்பான்மை தேவை என்று கூறப்பட்டது. உத்தரப்பிரதேசத்தில் பாஜவை சேர்ந்த பலர் அரசியலமைப்பை மாற்றுவது குறித்து பேசுகிறார்கள். இந்த விவகாரத்தில் பிரதமர் மோடி அமைதியாக இருப்பது ஆச்சரியமாக உள்ளது. நீங்கள் ஏன் அவர்கள் மீது நடவடிக்கை எடுக்கவில்லை. காங்கிரஸ் உணவு பாதுகாப்பு சட்டத்தை கொண்டு வந்தது. நீங்கள் எதையும் செய்யவில்லை. நீங்கள் 5கிலோ இலவச ரேசன் பொருட்களை வழங்குகிறீர்கள். இந்தியா கூட்டணி ஆட்சி அமைத்தால் நாங்கள் மாதந்தோறும் 10கிலோ இலவச ரேசன் பொருட்களை ஏழை மக்களுக்கு வழங்குவோம். நான் இதனை உத்தரவாதத்துடன் கூறுவேன். காரணம் இது ஏற்கனவே தெலங்கானா, கர்நாடகா உள்ளிட்ட மாநிலங்களில் இது செயல்படுத்தப்பட்டுள்ளது” என்றார்.