இந்தியா கூட்டணி சார்பில்நாளை மும்பையில் பொதுக்கூட்டம்

சென்னை: மார்ச் 16:
இந்தியா கூட்டணி பொதுக்கூட்டத்தில் பங்கேற்க நாளை காலை விமானம் மூலம் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் மும்பை செல்கிறார். நாடாளுமன்ற தேர்தலில் பாஜகவை வீழ்த்துவதற்காக காங்கிரஸ், திரிணாமூல் காங்கிரஸ், தேசியவாத காங்கிரஸ், சமாஜ்வாடி, திமுக உள்ளிட்டு 25 மேற்பட்ட கட்சிகள் ஒருங்கிணைந்து இந்தியா கூட்டணி என்ற பெயரில் புதிய அமைப்பினை உருவாக்கின.
இந்த கூட்டணியில் இருந்து ஐக்கிய ஜனதா தொலைக்காட்சியின் தலைவரும், பீகார் முதலமைச்சருமான நிதீஷ்குமார் விலகினார் . இதைத்தொடர்ந்து மேற்கு வங்கத்தில் திரிணாமூல் காங்கிரஸ் தனித்துப் போட்டியிடும் என்று மம்தா பானர்ஜி அறிவித்திருந்தார் . இதனால் இந்தியா கூட்டணிக்கு சற்று பின்னடைவு ஏற்பட்டது. இருப்பினும் இந்தியா கூட்டணி தலைவர்கள் தொடர்ந்து பாட்னா, பெங்களூரு, மும்பை, டெல்லி ஆகிய நகரங்களில் ஆலோசனைக் கூட்டங்களை நடத்தி வருகின்றனர்.
இதில் அகில இந்திய காங்கிரஸ் தலைவர் கார்கே, தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், ராஷ்டிரிய ஜனதாதளம் தலைவர் தேஜஸ்வி யாதவ், சமாஜ்வாடி தலைவர் அகிலேஷ் யாதவ் உத்தவ் பாலாசாகேப் தாக்கரே சிவசேனா தலைவர் உத்தவ் தாக்கரே, தேசியவாத காங்கிரஸ்- சரத்சந்திர பவார் கட்சி தலைவர் சரத்பவார் கலந்துகொள்கிறார்கள். தமிழ்நாட்டில் இருந்து முதலமைச்சருடன் வைகோ, திருமாவளவன் உள்ளிட்ட கூட்டணி கட்சித் தலைவர்களும் பங்கேற்கின்றனர்.
காங்கிரஸ் கட்சியின் முன்னாள் தலைவர் ராகுல்காந்தி ‘பாரத ஒற்றுமை நீதி யாத்திரை’யை கடந்த ஜனவரி 14-ந்தேதி மணிப்பூரில் தொடங்கினார். தற்போது இந்த யாத்திரை மராட்டியத்தில் நடைபெற்று வருகிறது. ராகுல்காந்தியின் யாத்திரை நாளை (17.03.2024) மும்பை தாதரில் உள்ள சட்டமேதை அம்பேத்கரின் நினைவிடமான சைத்யபூமியில் யாத்திரையை நிறைவு செய்கிறார்.
பின்னர் அன்று மாலையில் மும்பை சிவாஜி பார்க்கில் இந்தியா கூட்டணி கட்சிகளின் பொதுக்கூட்டத்துக்கு காங்கிரஸ் ஏற்பாடு செய்து உள்ளது. இந்த கூட்டத்தில் ராகுல்காந்தி பங்கேற்று பேசுகிறார். இந்நிலையில் இந்தியா கூட்டணி பொதுக் கூட்டத்தில் பங்கேற்க முதல்வர் மு.க.ஸ்டாலின் நாளை மும்பை செல்கிறார். நாளை காலை மும்பை செல்லும் முதல்வர் பொதுக் கூட்டம் முடிந்து நாளை இரவே சென்னை திரும்புகிறார்.