இந்தியா, பாகிஸ்தான் இடையேஅணு ஆயுத விவரங்கள் பரிமாற்றம்

இஸ்லாமாபாத், ஜன.2
இந்தியா மற்றும் பாகிஸ்தான் இடையே அணுசக்தி நிலைகள் மற்றும் வசதிகளுக்கு எதிரான தாக்குதல்களை தடை செய்யும் ஒப்பந்தம் கடந்த 1988-ம் ஆண்டு நிறைவேற்றப்பட்டது. இந்த ஒப்பந்தத்தின்படி இரு நாடுகளும் தங்கள் அணு ஆயுதங்கள் மற்றும் நிலைகள் குறித்த விவரங்களை
ஆண்டுதோறும் பரிமாறிக்கொள்ள வேண்டும். அதன்படி கடந்த 1992 ஜனவரி 1-ந்தேதி முதல் ஆண்டுதோறும் இந்த பரிமாற்ற நடைமுறை அமலில் இருக்கிறது. அந்தவரிசையில் இந்த ஆண்டும் நேற்று இரு நாடுகளும் தங்கள் அணு ஆயுதங்கள் குறித்த விவரங்களை பரஸ்பரம் பரிமாறிக்கொண்டன. டெல்லியில் உள்ள பாகிஸ்தான்
தூதரகத்தில் மத்திய வெளியுறவுத்துறை அமைச்சகம் இந்திய அணு ஆயுத விவரங்களை ஒப்படைத்தது. இதைப்போல இஸ்லாமாபாத்தில் உள்ள இந்திய தூதரகத்தில் அந்த நாட்டு வெளியுறவு அமைச்சகம் தங்கள் அணு ஆயுத விவரங்களை வழங்கியது. காஷ்மீர் விவகாரம் மற்றும் எல்லை தாண்டிய பயங்கரவாத தாக்குதல்களால்
இரு நாட்டு உறவில் சிக்கல் நீடித்தபோதும் இந்த பட்டியல் பரிமாற்றம் நடந்திருப்பது குறிப்பிடத்தக்கது.