இந்தியா-பாகிஸ்தான் எல்லை பகுதியில் நவீன பாதுகாப்பு வேலி

ஆமதாபாத், பிப்ரவரி . 20 குஜராத் மாநிலம் கட்ச் மாவட்டத்தையொட்டிய இந்தியா-பாகிஸ்தான் எல்லை பகுதியில் ஊடுருவலை தடுக்க நவீன பாதுகாப்பு வேலி முதல்கட்டமாக 13 கி.மீ. தூரத்துக்கு பரிட்சார்த்த முறையில் அமைக்கப்படுகிறது. இந்திய எல்லை பகுதி இந்தியாவில் ஜம்மு-காஷ்மீர், பஞ்சாப், ராஜஸ்தான் மற்றும் குஜராத் ஆகிய மாநிலங்கள் பாகிஸ்தான் எல்லை பகுதிகளில் வரக்கூடியவை ஆகும். இந்த எல்லைகள்தான், சீனா, வங்காளதேசம் உள்ளிட்ட நாட்டுடனான எல்லை பகுதிகளைவிட மிகப்பதற்றம் நிறைந்தவையாக காணப்படுகிறது. காஷ்மீரை தவிர்த்த மற்ற 3 மாநிலங்களிலும் பாகிஸ்தான் எல்லைகளை எல்லை பாதுகாப்பு படை (பி.எஸ்.எப்) தான் பாதுகாத்து கண்காணிக்கிறது. அந்த வகையில் பாகிஸ்தானுடனான 3,300 கி.மீ. எல்லை பகுதியில் சுமார் 500 கி.மீ. எல்லை பகுதி குஜராத் மாநிலம் கட்ச் மாவட்டத்தில் வருகிறது. தார் பாலைவனத்தின் தொடர்ச்சியான வறண்ட நிலப்பரப்பும், உப்பு பாலைவனமும், சதுப்புநில பகுதிகளும் குஜராத்தின், பாகிஸ்தானுடனான எல்லையாக இருப்பதால் எல்லையை கண்காணிப்பதும், பாதுகாப்பை மேம்படுத்துவதும் எல்லை பாதுகாப்பு படை வீரர்களுக்கு சவால் நிறைந்த பணியாகவே இருந்து வருகிறது. சுக்கூர் எனும் மிகப்பெரிய பரந்து விரிந்த ஏரியின் ஒரு பகுதியை பாகிஸ்தானும், மற்றொரு பகுதியை இந்தியாவும் பங்கிட்டு கொள்கிறது. இதன் மைய பகுதியில் சாலையை ஏற்படுத்தி, பாதுகாப்பு வேலியையும் அமைத்து இந்தியா தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டு வருகிறது. சில மைல் தூரம் கடந்ததும் சதுப்புநில பகுதி தொடங்குவதால் அங்கு இந்தியா-பாகிஸ்தான் இரு நாட்டிற்கும் எல்லை வேலி இதுவரை இல்லை. தற்போதுதான் சதுப்பு நிலத்தில் எல்லை வேலிகளை அமைக்கும் பணி தொடங்கியிருப்பதாக எல்லை பாதுகாப்பு படை வீரர்கள் (பி.எஸ்.எப்.) கூறுகின்றனர். எல்லைகளில் வேலி, ஆங்காங்கே கண்காணிப்பு கோபுரங்கள் அமைத்து எல்லை பாதுகாப்பு படை வீரர்கள் தொடர்ந்து கண்காணிப்பிலும், ரோந்து பணியிலும் ஈடுபட்டு வருகின்றனர். பாகிஸ்தான் எல்லையில் இதுபோன்ற வேலிகளும் அமைக்கப்படவில்லை. பொதுவாக இந்தியா, பாகிஸ்தான் நாட்டிற்கு தேவையில்லாமல் எந்த அச்சுறுத்தலையும் கொடுப்பதில்லை. இன்றும் பாகிஸ்தான் எல்லை பகுதிகளில் மீனவர்கள் உள்பட பாகிஸ்தான் குடிமக்களை அந்நாட்டின் ராணுவம் இந்தியாவுக்கு எதிராக பயன்படுத்திக்கொள்வதால் எல்லை பாதுகாப்பு படை வீரர்கள் கூடுதல் விழிப்புடன் பணியாற்றி வருகின்றனர்.

https://www.dailythanthi.com/News/India/modern-security-fence-along-india-pakistan-border-to-prevent-infiltration-903358