இந்தியா பாகிஸ்தான் போட்டி குறித்து பேசிய பாபர் அசாம்

நியூயார்க்: ஜூன் 3-
ஐசிசி ஆண்கள் டி20 கிரிக்கெட் 9வது உலக கோப்பை தொடர் இன்று கோலாகலமாக தொடங்கியது. கிரிக்கெட் ரசிகர்கள் ஆவலுடன் எதிர்பார்க்கும் இத்தொடரை அமெரிக்கா, வெஸ்ட் இண்டீஸ் இணைந்து
நடத்துகின்றன. நடப்பு சாம்பியன் இங்கிலாந்து, முதல் சாம்பியன் இந்தியா, முன்னாள் சாம்பியன்கள் வெஸ்ட் இண்டீஸ், பாகிஸ்தான், ஆஸ்திரேலியா, இலங்கை உட்பட மொத்தம் 20 அணிகள் இந்தப் போட்டியில் பங்கேற்கின்றன.
என்ற போதிலும் வரும் 9ம் தேதி நடைபெற உள்ள இந்தியா – பாகிஸ்தான் போட்டியின் மீது தான் அனைவரின் கண்ணோட்டமும் உள்ளது. இந்நிலையில் இந்தப் போட்டி குறித்து பாகிஸ்தான் அணியின் கேப்டன் பாபர் அசாம் கூறியதாவது; “மற்ற எல்லா போட்டிகளை விடவும் இந்தியா, பாகிஸ்தான் அணிகளுக்கு இடையிலான போட்டி குறித்த பேச்சு ரசிகர்கள் மத்தியில் அதிகம் இருக்கும்.
அது அனைவரும் அறிந்ததே. இந்தப் போட்டி வீரர்கள் மட்டுமல்லாது ரசிகர்கள் மத்தியிலும் வித்தியாசமான உற்சாகமூட்டும் உணர்வை தரும். உலகில் எங்கு சென்றாலும் இது இருக்கும். அவரவர் தங்கள் அணியை ஆதரிப்பார்கள்.
ஒவ்வொரு கிரிக்கெட் ரசிகரும் இந்தியா – பாகிஸ்தான் போட்டி மீது அதீத கவனம் வைப்பார்கள். இந்த போட்டி சார்ந்து இது மாதிரியான எதிர்பார்ப்பு நிச்சயம் பதட்டத்தை ஏற்படுத்தும்.
ஆனால், அதை எப்படி கையாளுகிறோம் மற்றும் ஆட்டம் சார்ந்த அடிப்படை விஷயங்களில் கவனம் செலுத்துவது போதுமானது. இந்த ஆட்டத்தில் அழுத்தம் அதிகம் இருக்கும். அந்த சூழலில் அமைதியாக இருந்து, நமது கடின உழைப்பின் மீதும், ஆட்டத்திறன் மீதும் நம்பிக்கை கொண்டிருந்தால் எதுவும் எளிதே” என பாபர் தெரிவித்துள்ளார்.