இந்தியா மீது தாக்குதல் நடத்த சதி

புதுடெல்லி, பிப்ரவரி 2- அயோத்தியின் பிரமாண்ட ராமர் கோயிலில் ராம் லல்லாவை நிறுவி உள்ள நிலையில்இந்தியாவைத் தாக்கி மொத்தமாக இந்துக்களைக் கொன்று விடுவோம் என்று ஐ.எஸ்.ஐ.எஸ் தீவிரவாதிகள் மிரட்டல் விடுத்துள்ள அதிர்ச்சி தகவல் வெளியாகியுள்ளது.
ஐஎஸ்ஐஎஸ் பயங்கரவாத அமைப்பு இந்தியா மீது தாக்குதல் நடத்தப்போவதாக வாய்ஸ் ஆஃப் குராசன் இதழில் மிரட்டல் விடுக்கப்பட்டுள்ளதால், முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் அதிகரிக்கப்பட்டுள்ளன.
வாய்ஸ் ஆப் குராசன் இதழின் மின் பதிப்பு சமூக ஊடகங்கள் மற்றும் இருண்ட இணைய தளங்கள் மூலம் தீவிரவாதிகளால் பகிரப்பட்டுள்ளது. அயோத்தியில், பாபர் மசூதி இடித்து, சட்டவிரோதமாக கோவில் கட்டப்பட்டது. குஜராத் படுகொலை 2002ல் நடந்தது. இதற்கெல்லாம் பழிவாங்க இந்தியா தாக்கப்படும். “இந்துக்கள் படுகொலை செய்யப்படுவார்கள்” என்று அந்தப் பத்திரிகையில் மிரட்டல் விடுக்கப்பட்டுள்ளது
நாங்கள் நேரடியாக இந்திய அரசிடம் பேசுகிறோம். வாள்களுடன் இந்தியா வருவோம். நிச்சயமாக, கோத்ரா படுகொலை, பாபர் மசூதி இடிப்புக்கு பழிவாங்குவோம். காஷ்மீர், குஜராத், முசாபர்நகர் சம்பவங்களுக்கும் பழிவாங்குவோம். முகமது நபியின் விருப்பத்தை நிறைவேற்ற என்ன வேண்டுமானாலும் செய்வோம்.
சில நாட்களுக்கு முன்பு, உத்தரப் பிரதேச பயங்கரவாத எதிர்ப்புப் படை அதிகாரிகள் அலிகார் முஸ்லிம் பல்கலைக்கழகத்தின் மற்றொரு மாணவரைக் கைது செய்தனர், அவர் தீவிரவாதிகள் உடன் தொடர்பு வைத்திருந்ததாகவும், நாட்டின் பல பகுதிகளில் தாக்குதல்களைத் திட்டமிட்டதாகவும் குற்றம் சாட்டப்பட்டார். இதனுடன், அலிகார் முஸ்லிம் பல்கலைக்கழகத்தைச் சேர்ந்த 10 மாணவர்களும் ஐஎஸ்ஐஎஸ் உடன் தொடர்புடையவர்கள் என்ற குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்டுள்ளனர்.
வர்த்தக தலைநகர் மும்பையில் 6 இடங்களில் வெடிகுண்டுகள் வைக்கப்பட்டுள்ளதாக போக்குவரத்து போலீசாருக்கு மிரட்டல் வந்துள்ளது கவலையை ஏற்படுத்தியுள்ளது.
அடையாளம் தெரியாத நபர் அனுப்பிய செய்தியில், 6 இடங்களில் வெடிகுண்டுகள் வைக்கப்பட்டுள்ளதாக தகவல் கிடைத்துள்ளது.
உடனடியாக அதிரடி நடவடிக்கையில் இறங்கிய மும்பை போலீசார் தீவிர விசாரணையை தொடங்கினர். போலீசார் 6 இடங்களில் நாய் படையுடன் விரைந்து சென்று தீவிர சோதனையில் ஈடுபட்டுள்ளனர்.
மும்பை நகரிலும் உஷாராக இருக்க அறிவுறுத்தப்பட்டுள்ளது.
வெடிகுண்டு மிரட்டல் செய்தியை அனுப்பிய நபரை கைது செய்வதற்கான நடவடிக்கையை பொலிசார் முன்னெடுத்துள்ளனர்.