இந்தியா விரைவில் 5 டிரில்லியன் டாலர் பொருளாதாரமாக மாறும்

ஜோகன்னஸ்பர்க், ஆக. 23- பிரேசில், ரஷியா, இந்தியா, சீனா, தென்ஆப்பிரிக்கா ஆகிய 5 நாடுகள் இணைந்து ‘பிரிக்ஸ்’ அமைப்பை நடத்தி வருகின்றன. 15-வது ‘பிரிக்ஸ்’ உச்சி மாநாடு, தென்ஆப்பிரிக்கா நாட்டின் ஜோகன்னஸ்பர்க் நகரில் உள்ள சான்டன் சன் ஓட்டலில் நேற்று ெதாடங்கியது. கொரோனா காரணமாக 3 ஆண்டுகளாக காணொலி காட்சி மூலம் நடந்த இம்மாநாடு, தற்போது நேரடி நிகழ்வாக நடக்கிறது. இதில் பங்கேற்குமாறு தென்ஆப்பிரிக்க அதிபர் சிறில் ரமாபோசா, பிரதமர் மோடிக்கு அழைப்பு விடுத்திருந்தார். அதை ஏற்று, பிரதமர் மோடி 3 நாள் பயணமாக நேற்று தென்ஆப்பிரிக்கா புறப்பட்டார். நாளை (வியாழக்கிழமை) வரை மாநாடு நடக்கிறது. பிரதமர் மோடியுடன், ‘பிரிக்ஸ்’ அமைப்பில் உறுப்பினர்களாக உள்ள பிரேசில் நாட்டின் அதிபர் லூயிஸ் இனாசியோ லுலா டா சில்வா, சீன அதிபர் ஜின்பிங், தென்ஆப்பிரிக்க அதிபர் சிறில் ரமாபோசா ஆகியோரும் கலந்து கொள்கின்றனர். 10-க்கும் மேற்பட்ட இதர நாடுகளின் பிரதிநிநிதிகள், பன்னாட்டு அமைப்புகளின் பிரதிநிதிகள், ஐ.நா. பொதுச்செயலாளர் ஆன்டனியோ குட்டரஸ் ஆகியோருக்கும் தென்ஆப்பிரிக்கா அழைப்பு விடுத்துள்ளது.
தென்ஆப்பிரிக்க வர்த்தகம் மற்றும் தொழில்துறை மந்திரி இப்ராகிம் படேல், மாநாட்டை அதிகாரபூர்வமாக தொடங்கி வைத்தார்.
முதல் நிகழ்ச்சியாக, வர்த்தக உரையாடல் நடந்தது. 5 பிரிக்ஸ் நாடுகள் மற்றும் இதர நாடுகளை சேர்ந்த சுமார் 1,200 பிரதிநிதிகள் பங்கேற்றனர்.