இந்திய அணியின் புதிய பயிற்சியாளராக கவுதம் கம்பீர் நியமனம்

மும்பை,ஜூலை 9-
இந்திய கிரிக்கெட் அணியின் புதிய தலைமை பயிற்சியாளராக கவுதம் கம்பீர் நியமிக்கப்பட்டுள்ளார். இதனை பிசிசிஐ அதிகாரபூர்வமாக அறிவித்துள்ளது.
இது தொடர்பாக பிசிசிஐ செயலாளர் ஜெய் ஷா தனது எக்ஸ் தள பக்கத்தில் கவுதம் கம்பீர் உடனான தனது புகைப்படத்தை பகிர்ந்து வெளியிட்டுள்ள அறிவிப்பில், “இந்திய கிரிக்கெட் அணியின் புதிய தலைமை பயிற்சியாளராக கவுதம் கம்பீரை வரவேற்பதில் மிகுந்த மகிழ்ச்சி அடைகிறேன். சமகால கிரிக்கெட் வேகமாக வளர்ச்சி அடைந்துள்ளது. மாறிவரும் சூழலை கவுதம் கம்பீர் அருகிலிருந்து பார்த்துள்ளார்.
தனது கரியர் முழுவதும் நெருக்கடிகளை தாங்கிக்கொண்டு, பல்வேறு பொறுப்புகளில் சிறந்து விளங்கியவர் என்பதால், இந்திய கிரிக்கெட்டை முன்னோக்கி வழிநடத்த கவுதம் கம்பீர் சிறந்த நபர் என நம்புகிறேன். இந்திய அணி குறித்த அவரின் தெளிவான பார்வையும், பரந்த அனுபவமும் பயிற்சியாளராக அவரை தேர்வு செய்துள்ளது. புதிய பயணத்தை தொடங்கும் அவருக்கு பிசிசிஐ முழு ஆதரவும் அளிக்கும்” என்று தெரிவித்துள்ளார். முன்னதாக, இந்திய அணியின் தலைமை பயிற்சியாளராக இருந்த ராகுல் திராவிட்டின் பதவிக் காலம், அண்மையில் நடைபெற்று இந்திய அணி சாம்பியன் ஆன டி20 உலக கோப்பை 2024 தொடருடன் நிறைவடைந்தது குறிப்பிடத்தக்கது.
முன்னதாக, நிகழ்வு ஒன்றில் பேசிய கவுதம் கம்பீர் “இந்திய அணியின் தலைமை பயிற்சியாளராக பணியாற்ற நான் விரும்புகிறேன். தேசிய அணிக்கு பயிற்சி அளிப்பதை காட்டிலும் வேறெதுவும் சிறந்த கவுரவம் இருக்காது. 140 கோடி மக்களின் பிரதிநிதியாக இயங்க வேண்டி இருக்கும். இந்தியா உலகக் கோப்பையை வெல்லும். அதற்கு அச்சமின்றி இருக்க வேண்டும்” என்று கூறியிருந்தது கவனிக்கத்தக்கது.
2007 டி20 உலகக் கோப்பை மற்றும் 2011 ஒருநாள் உலகக் கோப்பை வென்ற இந்திய அணியில் அங்கம் வகித்தவரான கம்பீர் இந்திய அணியின் பயிற்சியாளராக பணியாற்ற சரியான தேர்வாக இருப்பார் என இந்திய அணியின் முன்னாள் கேப்டனும், பிசிசிஐ-யின் முன்னாள் தலைவருமான சவுரவ் கங்குலியும் குறிப்பிட்டிருந்தது நினைவுகூரத்தக்கது.