இந்திய எல்லைக்குள் நுழைய முயன்ற3 வங்கதேச பெண்கள் கைது

அகர்தலா: பிப். 12:
திரிபுராவிலிருந்து மேற்கு வங்க மாநிலம் கொல்கத்தாவுக்கு முறையான ஆவணங்கள் இன்றி ரயிலில் பயணம் செய்த 3 பெண்களை போலீஸார் நேற்று கைது செய்தனர். இதுகுறித்து அகர்தலாவைச் சேர்ந்த காவல் துறை அதிகாரி ஒபைதுர் ரஹ்மான் கூறியதாவது:
வங்கதேசத்தைச் சேர்ந்த 3 பெண்கள் திரிபுராவிலிருந்து கொல்கத்தாவுக்கு செல்வதற்காக ரயிலில் ஏறியுள்ளனர். அவர்களிடம் நடத்திய விசாரணையில் உரிய அனுமதியின்றி பாஸ்போர்ட் இல்லாமல் பயணம் செய்வது தெரியவந்தது. இதையடுத்து, அந்த 3 வங்கதேச பெண்களும் கைது செய்யப்பட்டனர்.
அவர்கள் மீது இந்திய பாஸ்போர்ட் சட்டத்தின் கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டது. அவர்கள் எந்த நோக்கத்துக்காக கொல்கத்தா செல்ல முயன்றனர் என்பது குறித்து தீவிர விசாரணை நடத்தப்பட்டு வருகிறது.
மேலும், ஆள் கடத்தல் குற்றச்சாட்டின்பேரில் செபாஹிஜாலா மாவட்டத்தைச் சேர்ந்த இரண்டு ஆண் மற்றும் ஒரு பெண் என 3 நபர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். இவ்வாறு ஒபைதுர் ரஹ்மான் தெரிவித்தார்.