இந்திய ஓபன் பேட்மிண்டன் தொடர் இன்று தொடக்கம்


டெல்லி, ஜன. 11- நாடு முழுவதும் கொரோனா தொற்று பரவல் அதிகரித்துள்ள நிலையிலும், இந்தியா ஓபன் பேட்மிண்டன் தொடர் இன்று தொடங்குகிறது. டெல்லியில் உள்ள இந்திரா காந்தி உள்விளையாட்டு அரங்கில் இந்த போட்டிகள் நடைபெறுகின்றன. போட்டிகளை காண ரசிகர்கள் மற்றும் ஊடகங்களுக்கு அனுமதி இல்லை என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
இந்தியாவின் பி.வி.சிந்து, சாய்னா நேவால், ஸ்ரீகாந்த் உள்ளிட்டோர் இந்த தொடரில் பங்கேற்றுள்ள நிலையில், கொரோனா பாதிப்பால் ஆண்கள் இரட்டை ஆட்டங்களில் இருந்து இந்தியாவின் சுமீத் ரெட்டி மற்றும் மனு அத்ரி ஆகியோரும் விலகி உள்ளனர். இந்தியாவின் சாய் பிரனீத்தும் போட்டியில் பங்கேற்க போவதில்லை என அறிவித்துள்ளார்.
பி.வி.சிந்து மற்றும் கே.ஸ்ரீகாந்த் ஆகியோர் இந்த தொடரில் சிறப்பாக விளையாடி பட்டம் வெல்வார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது. சிந்து கடைசியாக 2018-லும், ஸ்ரீகாந்த் 2017-லும் பட்டத்தை வென்றுள்ளனர். மேலும் ஐரிஸ் வாங் (அமெரிக்கா) மற்றும் ஃபிட்ரியானி (இந்தோனேசியா) ஆகியோரும் போட்டியில் இருந்து விலகி உள்ளனர். இதனால் சாய்னா நோவலுக்கும் அதிக வாய்ப்பு உள்ளதாக தெரிகிறது.
முதல் நிலை வீரரான ஜொங்கோல்பன் கிடிஹராகுல் மற்றும் ரவிந்தா பிரஜோங்ஜாய் ஆகியோர் வெளியேறியதைத் தொடர்ந்து, இரண்டாம் நிலை வீரரான அஷ்வினி போனப்பா மற்றும் சிக்கி ரெட்டி ஆகியோர் இந்தியாவுக்கு பட்டம் பெறும் பெரும் வாய்ப்பு உள்ளதாக கருதப்படுகிறது