“இந்திய தேர்தலில் தலையிட முயற்சி..” அமெரிக்க அமைப்பு மீது மத்திய அரச குற்றச்சாட்டு

டெல்லி, மே 3- சர்வதேச மத சுதந்திரத்திற்கான அமெரிக்க ஆணையம் இந்தியாவின் மத சுதந்திர சூழல் கண்காணிக்கப்பட வேண்டும் என அறிக்கையை வெளியிட்டிருந்த நிலையில், இது தொடர்பாக மத்திய அரசு பதிலடி கொடுத்துள்ளது. அமெரிக்க அரசின் கீழ் இயங்கும் USCIRF- அதாவது சர்வதேச மத சுதந்திரத்திற்கான அமெரிக்க ஆணையம் ஒவ்வொரு ஆண்டும் உலக நாடுகளில் மத சுதந்திரம் எப்படி இருக்கிறது என்பது குறித்த அறிக்கையை வெளியிடும். அமெரிக்க அமைப்பு: அதன்படி இந்தாண்டிற்கான அறிக்கையை இந்த அமைப்பு கடந்த மே 1ஆம் தேதி வெளியிட்டது. அதில் 11 நாடுகளில் மத சுதந்திரத்தின் நிலைமையைக் கண்காணிக்க வேண்டும் (Country of Particular Concern) என கூறப்பட்டு இருந்தது.
அந்த லிஸ்டில் இந்தியாவும் இடம்பெற்று இருந்தது தான் பேசுபொருள் ஆனது. இந்தியா இந்த லிஸ்டில் 5ஆவது ஆண்டாகத் தொடர்ந்து இடம்பெறுவது குறிப்பிடத்தக்கது. இதற்கிடையே இந்த ரிப்போர்ட் குறித்து மத்திய வெளியுறவுத் துறை பதிலளித்துள்ளது. அதில் அமெரிக்காவின் இந்த சர்வதேச மத சுதந்திரத்திற்கான அமெரிக்க ஆணையம், இந்தியாவின் தேர்தல் நடவடிக்கையில் தலையிடுவதாக வெளியுறவு அமைச்சகம் குற்றஞ்சாட்டியுள்ளது. தேர்தலில் தலையிட முயற்சி: இது தொடர்பாக வெளியுறவுத் துறை செய்தித் தொடர்பாளர் ரந்தீர் ஜெய்ஸ்வால் கூறுகையில்,
“சர்வதேச மத சுதந்திரத்திற்கான அமெரிக்க ஆணையம் ஒரு பக்கச் சார்புடைய அமைப்பு தான்.. அவர்களுக்கு சில அரசியல் நோக்கங்கள் உள்ளன.
ஒவ்வொரு ஆண்டும் தங்கள் வருடாந்திர அறிக்கையின் ஒரு பகுதியாக இந்தியா குறித்து இதுபோன்ற ஆதாரமில்லாத தகவல்களை வெளியிட்டு வருகிறார்கள்.
இந்தியாவின் மாறுபட்ட, பன்மைத்துவ மற்றும் ஜனநாயக நெறிமுறைகளை இந்த அமைப்பு புரிந்துகொள்ள முயலுமா என்று கூட எங்களுக்குத் தெரியவில்லை.. இருப்பினும், உலகின் மிகப்பெரிய தேர்தல் ஜனநாயகத்தில் தலையிடும் அவர்களின் முயற்சி ஒருபோதும் வெற்றியடையாது” என்றார்.
பரபர குற்றச்சாட்டு:
இந்த சர்வதேச மத சுதந்திரத்திற்கான அமெரிக்க ஆணையம் அமெரிக்க அரசுக்குக் கீழ் இயங்குகிறது.
எனவே, ரந்தீர் ஜெய்ஸ்வாலின் இந்த கருத்து நேரடியாக அமெரிக்காவைச் சாடுவது போல இருந்தது. இதைத் தெளிவுபடுத்துமாறு செய்தியாளர்கள் கேட்ட போது அவர், “நான் சொல்ல வேண்டியதைச் சொல்லிவிட்டேன்.
இந்த குறிப்பிட்ட அமைப்பின் செயல்பாடுகளில் சந்தேகம் இருப்பதாக நாங்கள் முன்பே கூறி இருக்கிறோம்.
தயவுசெய்து எனது விளக்கத்தைத் தெளிவாகப் படியுங்கள்.. அதில் அனைத்து கேள்விகளுக்கும் பதில் கிடைக்கும். அதில் பாயிண்டு பாயிண்டாக விளக்கி இருக்கிறோம்” என்று அவர் தெரிவித்தார்.