இந்திய மருந்துகளை வாங்க விரும்பும் சீன மக்கள்

பெய்ஜிங்: டிச.29-
சீனாவில் இதுவரை இல்லாத அளவில் கரோனா பாதிப்பு மிக வேகமாக அதிகரித்து வருகிறது. இந்த நிலையில் நடப்பாண்டில் ஃபைசர் நிறுவனத்தின் பாக்லோவிட், அஸ்வுடின் ஆகிய இரண்டு கரோனா தடுப்பு மருந்துகளுக்கு மட்டுமேசீனா அங்கீகாரம் வழங்கியுள்ளது. அதுவும், அந்த இரண்டு மருந்துகளும் சில மருத்துவமனைகளில் மட்டுமே கிடைக்கிறது.
இந்த நிலையில், தேவை அதிகரித்து வரும் சூழலில் இந்தியாவில் இருந்து மலிவான விலையில் கரோனா ஜெனரிக் மருந்துகளை சட்டவிரோதமான முறையில் இறக்குமதி செய்ய பெரும்பாலான சீனர்கள் விரும்புவதாக சவுத் சைனா மார்னிங் போஸ்ட் தெரிவித்துள்ளது.
தற்போதைய நிலையில் தேவைஅதிகரித்துள்ளதால், பிரிமோவிர், பக்ஸிஸ்டா, மொல்நுவன்ட், மோல்நட்ரிஸ் ஆகிய நான்கு பிராண்ட் பெயர்களில் கரோனா தடுப்பு மருந்துகள் இந்தியாவிலிருந்து சீன சந்தைகளில் சட்டவிரோதமாக இறக்குமதி செய்யப்பட்டு விற்பனை செய்யப்படுகின்றன.கரோனா ஜெனரிக் தடுப்பு மருந்துஒரு பெட்டி 1,000 யுவானுக்கு(ரூ.11,870) விற்பனை செய்யப்படுவதாக சீன சமூக வலைதள வெய்போவில் வெளியான செய்தி தற்போது அங்கு வைரலாகி உள்ளது.
இந்த நிலையில், இந்தியாவில் தயாரிக்கப்படும் கரோனா மருந்துகள் சீன அரசால் அங்கீகரிக்கப்படவில்லை என்றும், அவற்றை விற்பது தண்டனைக்குரிய குற்றமாகும் என்றும் சீனா அறிவித்துள்ளது.
அங்கீகரிக்கப்படாத வழிமுறைகளில் கரோனா மருந்துகளை பயன்படுத்துவது ஆபத்தை வரவழைக்கும். எனவே, கள்ள சந்தையில் கரோனா தடுப்பு மருந்துகளை வாங்க வேண்டாம் என்று சீன சுகாதாரத் துறை ஏற்கெனவே எச்சரித்துள்ளது.
கரோனா தடுப்பு மருந்து ஒரு பெட்டி ரூ.11,870-க்கு விற்பனையாவதாக சீன சமூக வலைதளத்தில் வைரலாகி உள்ளது.