இந்திய வம்சாவளியை கைது செய்த அமெரிக்கா! உண்மை என்ன?

வாஷிங்டன்: அக்டோபர் 15-
அமெரிக்கா-இந்தியா உறவுகள் தொடர்பான பிரபல நிபுணர் ஆஷ்லே டெல்லிஸ், ரகசிய ஆவணங்களைச் சேகரித்து வைத்துக்கொண்டு சீன அதிகாரிகளைச் சந்தித்ததாகக் கூறி கைது செய்யப்பட்டுள்ளார். இந்திய வம்சாவளியைச் சேர்ந்த இந்த அமெரிக்க ஆய்வாளர் மீதான குற்றச்சாட்டுகள் உறுதி செய்யப்பட்டால், அவருக்கு 10 ஆண்டுகள் வரை சிறைத்தண்டனை விதிக்கப்படலாம். தெற்காசிய கொள்கைகள் குறித்த நீண்டகால ஆலோசகரான டெல்லிஸ் இருந்து வந்திருக்கிறார்.
இவர் மீது தேசிய பாதுகாப்பு தொடர்பான ரகசிய ஆவணங்களை சட்டவிரோதமாக வைத்திருந்ததாக குற்றம் சாட்டப்பட்டுள்ளது. அமெரிக்க நீதித்துறை வெளியிட்ட தகவலின்படி, 64 வயதான ஆஷ்லே டெல்லிஸ், வர்ஜீனியாவின் வியன்னாவில் உள்ள தனது வீட்டில் ஆயிரம் பக்கங்களுக்கும் அதிகமான உயர்மட்ட ரகசிய மற்றும் ரகசிய ஆவணங்களை சட்டவிரோதமாக வைத்திருந்தது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
அமெரிக்க-இந்தியா உறவுகள் குறித்து நீண்டகாலமாகப் பேசிவரும் டெல்லிஸ், பல நிர்வாகங்களின் கீழ் பணியாற்றியுள்ளார். ஜார்ஜ் டபிள்யூ. புஷ் நிர்வாகத்தின் கீழ் தேசிய பாதுகாப்புக் கவுன்சிலில் பணியாற்றியுள்ளார். மேலும், எஃப்.பி.ஐ பிரமாண பத்திரத்தில் மாநிலத் துறைக்கு ஊதியம் பெறாத ஆலோசகராகவும், பென்டகனின் நெட் அசெஸ்மென்ட் அலுவலகத்தின் ஒப்பந்ததாரராகவும் பணியாற்றியுள்ளார். வாஷிங்டனைச் சேர்ந்த கார்னகி என்டோவ்மென்ட் ஃபார் இன்டர்நேஷனல் பீஸின் மூத்த உறுப்பினராகவும் உள்ளார்.தற்போது இவர் மீது தேசிய பாதுகாப்பு மீறல் குற்றச்சாட்டுகள் பதிவாகியிருக்கின்றன. அதாவது, டெல்லிஸ் செப்டம்பர் மற்றும் அக்டோபர் மாதங்களில் பாதுகாப்பு மற்றும் வெளியுறவுத் துறை கட்டிடங்களில் இருந்து ரகசிய ஆவணங்களை அணுகி, அச்சிட்டு எடுத்து சென்றிருக்கிறார். அமெரிக்க ராணுவ விமானங்களின் திறன்கள் தொடர்பான ரகசிய கோப்புகளை அச்சிட்ட பிறகு, அரசு அலுவலகத்திலிருந்து லெதர் பிரீஃப்கேஸுடன் அவர் வெளியேறும் காட்சிகள் சி.சி.டி.வி காட்சிகளில் பதிவாகியுள்ளது. கடந்த 11ம் தேதி அன்று நடத்தப்பட்ட சோதனையில், அவரது வீட்டில் உள்ள பூட்டப்பட்ட கோப்பு பெட்டிகள், அடித்தள அலுவலக மேசை மற்றும் சேமிப்பு அறையில் உள்ள குப்பை பைகள் உட்பட பல இடங்களில் ரகசிய ஆவணங்கள் கண்டுபிடிக்கப்பட்டன.