இந்திய வம்சாவளி என்பதில் பெருமை கொள்கிறேன்: இங்கிலாந்து பிரதமர் ரிஷி சுனக்

புதுடெல்லி, செப். 7- டெல்லியில் வருகிற 9, 10 ஆகிய தேதிகளில் நடைபெறவுள்ள ‘ஜி-20’ மாநாட்டில் கலந்துகொள்வதற்காக இங்கிலாந்து பிரதமர் ரிஷி சுனக் இந்தியா வரவுள்ளார். இதையொட்டி அவர் பி.டி.ஐ. செய்தி நிறுவனத்துக்கு பிரத்யேக பேட்டி அளித்தார்.
அந்த பேட்டியில் இந்தியாவுக்கும், தனக்குமான பிணைப்பு, இந்திய-இங்கிலாந்து உறவு, இங்கிலாந்தில் அதிகரித்து வரும் காலிஸ்தான் ஆதரவாளர்களின் வன்முறைகள் உள்ளிட்ட பல்வேறு விவகாரங்கள் குறித்து ரிஷி சுனக் விரிவாக பேசினார். அதன் விவரம் பின்வருமாறு:- இந்திய வம்சாவளி என்பதிலும், இந்தியாவுடனான எனது தொடர்புகள் குறித்தும் நான் மிகவும் பெருமைப்படுகிறேன். உங்களுக்கு தெரியும், என் மனைவி ஒரு இந்தியர். அதோடு பெருமைமிக்க இந்துவாக இந்தியா மற்றும் இந்திய மக்களுடன் எனக்கு எப்போதும் தொடர்பு இருக்கும். நான் இங்கிலாந்து பிரதமராக நியமிக்கப்பட்டதற்கு இந்திய மக்களிடம் இருந்து பெரும் வரவேற்பு கிடைத்தது. பிரதமர் ஆன பிறகு நான் செய்த முதல் காரியங்களில் ஒன்று, பிரதமர் அலுவலககத்தில் இந்திய வம்சாவளிகளுடன் சேர்ந்து தீபாவளி பண்டிகையை கொண்டாடியது. அரசியலை குடும்பத்தில் இருந்து பிரித்து வைத்திருப்பது மிகவும் முக்கியம்,
ஆனால் எனது பெற்றோர் மற்றும் மாமனார்-மாமியார் போலவே எனது மனைவியும், 2 மகள்களும் எனது மதிப்புகளை மிகவும் வழிநடத்துகிறார்கள். ‘ஜி-20’ மாநாட்டுக்காக மனைவி அக்ஷதாவுடன் இந்தியாவுக்கு பயணம் செய்வது மிகவும் மகிழ்ச்சியாக இருக்கிறது. சிறுவயதில் நாங்கள் சென்ற சில இடங்களுக்கு செல்லும் வாய்ப்பு கிடைக்கும் என்று நம்புகிறோம். பிரதமர் நரேந்திர மோடியை சந்தித்து பல்வேறு உலகளாவிய சவால்களை கையாள்வதில் இந்தியா மற்றும் இங்கிலாந்து இடையேயான ஒத்துழைப்பு எவ்வாறு உதவுகிறது என்பது குறித்து ஆலோசிக்க ஆவலுடன் இருக்கிறேன்.
இந்தியாவின் பன்முகத்தன்மை மற்றும் அதன் அசாதாரண வெற்றிகள், ‘ஜி-20’ மாநாட்டை சரியான நேரத்தில் நடத்துவதற்கு இந்தியா சரியான நாடு என்பதை உணர்த்துகிறது. இந்தியா இத்தகைய உலகளாவிய தலைமையை வெளிப்படுத்துவதை பார்ப்பது மகிழ்ச்சி அளிக்கிறது. உலக பொருளாதாரத்தை ஸ்திரப்படுத்துவது முதல் பருவநிலை மாற்றத்தை கையாள்வது வரை உலகம் எதிர்கொள்ளும் மிகப்பெரிய சவால்களை எதிர்கொள்ள ‘ஜி-20’ தலைவர் பதவியின் மூலம் இந்தியாவுடன் நாங்கள் நெருக்கமாக பணியாற்றுவோம். இரு தரப்புக்கும் பயனளிக்கும் மற்றும் 2030-க்குள் வர்த்தகத்தை இரட்டிப்பாக்குவதற்கான பகிரப்பட்ட லட்சியத்தை எளிதாக்கும் ஒரு சுதந்திர வர்த்தக ஒப்பந்தம் இறுதி செய்யப்படுவதற்கு இன்னும் சில வழிகள் உள்ளன. இது முன்னோக்கிய மற்றும் நவீன ஒப்பந்தமாக இருக்கும். இங்கிலாந்தில் எந்த விதமான பயங்கரவாதத்தையும் ஏற்றுக்கொள்ள முடியாது, வன்முறை, பிளவுபடுத்தும் சித்தாந்தங்கள் எதுவாக இருந்தாலும், அவற்றை எதிர்க்க வேண்டிய கடமையை நான் மிகவும் தீவிரமாக எடுத்துக்கொள்கிறேன். அந்த வகையில் காலிஸ்தான் சார்பு பயங்கரவாதத்தின் அச்சுறுத்தலைச் சமாளிக்க இந்திய அரசாங்கத்தில் உள்ள எங்கள் கூட்டாளிகளுடன் நாங்கள் நெருக்கமாக பணியாற்றி வருகிறோம். இவ்வாறு அந்த பேட்டியில் ரிஷி சுனக் பேசினார்.