இந்துக்கள் குறித்து அவதூறு பேசியதாக ஆ.ராசா மீது புகார்

சென்னை, செப்டம்பர். 15 இந்துக்கள் பற்றி தரக்குறைவாக பேசியதாக திமுக எம்பி ஆ.ராசா மீது வழக்குப் பதிவு செய்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என ராமநாதபுரம் மாவட்ட பாஜக சார்பில் அதன் மாவட்ட பொதுச்செயலாளர் ஆத்ம கார்த்திக், மாவட்ட காவல் கண்காணிப்பாளர் பி.தங்கதுரையிடம் புகார் மனு அளித்தார்.
பாஜக மாவட்டத் தலைவர் கதிரவன், நகராட்சி கவுன்சிலர் குமார் உள்ளிட்ட கட்சியினர் உடனிருந்தனர்.
இதுகுறித்து பாஜக மாவட்டத் தலைவர் கதிரவன் செய்தியாளர்களிடம் கூறியதாவது: திமுக எம்பி ஆ.ராசா, தொடர்ந்து இந்து மதத்தை பற்றி அவதூறாகப் பேசி வருகிறார்.
அவர் இந்துவாக தேர்தலில் போட்டியிட்டு வெற்றி பெற்றுள்ளாரா என தகவல் உரிமைச் சட்டம் மூலம் அறிய உள்ளோம். இந்துக்களை மிகவும் தரம் தாழ்ந்து பேசியுள்ளார்.
திமுகவில் இருந்து கொண்டு இந்து மதத்தை புண்படுத்தும் வகையில் பேசும் அவரை கட்சியில் இருந்து நீக்க வேண்டும், அவரது எம்பி பதவியை தகுதி நீக்கம் செய்ய வேண்டும். ஆ.ராசா மீது வழக்குப் பதிவு செய்ய வேண்டும்.
அவர் மீது முதல்வர் நடவடிக்கை எடுக்க வேண்டும. இவ்வாறு அவர் கூறினார்.