இந்தோ- ஜெர்மனி இளம் தலைவர்கள் மாநாடு: பெங்களூருவில் தொடக்கம்

புதுடெல்லி,நவ.2-
கடந்த 2017-ம் ஆண்டு பிரதமர் மோடி, அப்போதைய ஜெர்மனி பிரதமர் ஏஞ்செலா மெர்க்கெல் ஆகியோரால் இந்தோ-ஜெர்மனி இளம் தலைவர்கள் கூட்டமைப்பு அறிமுகம் செய்யப்பட்டது. இந்தியா மற்றும் ஜெர்மனி நாடுகளுக்கிடையே பொருளாதார வளர்ச்சியை மேம்படுத்துவதும், புவிசார் அரசியல் தொடர்புகளை வலுப்படுத்துவதும் இதன் நோக்கம் ஆகும். இக்கூட்டமைப்பின் முக்கிய செயல்பாடாக ஜெர்மனி மற்றும் இந்திய இளம் தலைவர்களை கண்டறிந்து, வணிகம், அரசியல், அறிவியல், தொழில்நுட்ப முன் னேற்றம் மற்றும் கலாச்சார செயல் பாடுகள் தொடர்பாக ஆண்டுக்கு ஒருமுறை இளம் தலைவர்கள் மாநாடு நடத்தப்படுகிறது. ஒரு வருடம் ஜெர்மனியிலும் அடுத்த வருடம் இந்தியாவிலும் என இம்மாநாடு நடத்தப்பட்டு வருகிறது. இதில் பங்குபெற தலைமைப் பண்புடன் சிறப்பாக செயல்பட்டு வரும் 20 இந்திய இளம் தலைவர்கள் மற்றும் 20 ஜெர்மனிய இளம் தலைவர்கள் தேர்ந்தெடுக்கப்பட்டு மாநாட்டுக்கு அழைக்கப்படுகின்றனர். இது குறித்து ‘இந்து தமிழ் திசை’ நாளிதழிடம் சேலம் ஓமலூரை சேர்ந்த ஜெர்மனிவாழ் இந்தியரும் மாநாட்டின் அழைப்பாளர்களில் ஒருவருமான பி.செல்வகுமார் கூறும்போது, ‘இடையில் கரோனா பெருந்தொற்றால் இம் மாநாடு நடத்தப்படவில்லை. கரோனாவுக்கு பிறகு இன்று பெங்களூருவில் நடைபெறும் முதல் மாநாடு இதுவாகும். இதில் பருவநிலை மாற்றம், எதிர்கால போக்குவரத்து, இந்தியாவில் தொழில் முனைவோருக்கான சூழல் மற்றும் ஜெர்மனியில் தகவல் தொழில்நுட்ப கட்டமைப் புக்கான இந்தியாவின் பங்கு மற்றும் வாய்ப்புகள் போன்ற தலைப்புகளில் இந்தியா-ஜெர்மனி இளம் தலைவர்கள் கலந்துரையாட உள்ளனர்’ என்றார். ஜி20 அமைப்புக்கு சிறப்பாக தலைமையேற்று பின்னர், பெங்களூரு மாநகரத்தில் வரும் 5-ம் தேதி வரை இம்மாநாடு சிறப்பான முறையில் நடைபெறவுள்ளது. மாநாட்டில் சிறப்பு பேச்சாளர்களாக செபி நிர்வாக ஆலோசனை குழுவின் தலைவரான மோனிகா ஹெலன், ஸ்சுலிக் மேலாண்மை மற்றும் வணிகக் கல்லூரியின் பேராசிரியர் ரகுநாதன், பாரத்பென்ஸ் நிறுவனத்தின் துணைத்தலைவர் டாக்டர் அன்சுமன் அவஸ்தி உள்ளிட்ட பல்வேறு பெருநிறுவனங்களின் முதன்மை அதிகாரிகள் சிறப்பு சொற்பொழி வாற்ற உள்ளனர்.