இந்த தோல்வி எங்களுக்கு வலி கொடுக்கிறது” – பாக். கேப்டன் பாபர் அஸம்

சென்னை: அக்.24-
ஆப்கானிஸ்தான் அணிக்கு எதிரான தோல்வி தங்களுக்கு வலி கொடுப்பதாக பாகிஸ்தான் கிரிக்கெட் அணியின் கேப்டன் பாபர் அஸம் தெரிவித்துள்ளார். சென்னை – சேப்பாக்கம் கிரிக்கெட் மைதானத்தில் நடைபெற்ற பாகிஸ்தானுக்கு எதிரான உலகக் கோப்பை லீக் போட்டியில் 8 விக்கெட்கள் வித்தியாசத்தில் ஆப்கானிஸ்தான் அணி வெற்றி பெற்றது.
283 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்கை ஆப்கானிஸ்தான் வெற்றிகரமாக விரட்டியது. இதன் மூலம் ஒருநாள் கிரிக்கெட் வரலாற்றில் முதல் முறையாக பாகிஸ்தானை ஆப்கன் வென்றுள்ளது. நடப்பு உலகக் கோப்பை தொடரில் 5 போட்டிகளில் விளையாடி 2 வெற்றிகளை ஆப்கன் மற்றும் பாகிஸ்தான் அணிகள் பெற்றுள்ளன. ரன் ரேட் அடிப்படையில் பாகிஸ்தான் 5-வது இடத்திலும், ஆப்கன் 6-வது இடத்திலும் உள்ளது.
“இந்த தோல்வி வலி கொடுக்கிறது. நாங்கள் சிறப்பாக பேட் செய்தோம். நல்ல இலக்கை செட் செய்தோம். ஆனால், எங்களது பந்து வீச்சு சிறப்பானதாக அமையவில்லை. மிடில் ஓவர்களில் நாங்கள் விக்கெட் வீழ்த்த தவறினோம். பவுண்டரிகளை தடுக்க தவறினோம். அதனால் ரன்களை கொடுத்தோம். சுழற்பந்து வீச்சாளர்கள் சரியான லெந்தில் பந்து வீசவில்லை.
ஆப்கன் அணி பேட்டிங், பவுலிங் மற்றும் ஃபீல்டிங் என மூன்றிலும் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தியது. அதனால் தான் அவர்கள் வெற்றி பெற்றார்கள். எங்களது பந்து வீச்சு மற்றும் ஃபீல்டிங் சிறப்பானதாக இல்லை. அடுத்த போட்டியில் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்த முயற்சிப்போம்” என பாபர் அஸம் தெரிவித்தார்.
நடப்பு உலகக் கோப்பை தொடரில் இந்தியா, ஆஸ்திரேலியா மற்றும் ஆப்கனிஸ்தான் என அடுத்தடுத்து மூன்று போட்டிகளில் ஹாட்-ட்ரிக் தோல்வியை தழுவி உள்ளது பாகிஸ்தான்.