இனி அமெரிக்கரை திருமணமே செய்தாலும் கிரீன் கார்டு கிடைக்காது

வாஷிங்டன், ஜன. 2- அமெரிக்காவில் வசிக்கும் வெளிநாட்டுக் குடிமக்களுக்கு எதிராக டிரம்ப் நிர்வாகம் பல்வேறு கட்டுப்பாடுகளை வரிசையாக விதித்து வருகிறது. இதற்கிடையே கிரீன் கார்டு பெறும் முக்கியமான வழிகளில் ஒன்றாகக் கருதப்பட்ட அமெரிக்கக் குடிமகனை திருமணம் செய்து,
அதன் மூலம் கிரீன் கார்டு பெறும் முறையில் டிரம்ப் நிர்வாகம் பல கட்டுப்பாடுகளை விதிக்க ஆரம்பித்துள்ளது. ஒவ்வொரு ஆண்டும் உலகின் பல்வேறு நாடுகளில் இருந்தும் பல லட்சம் பேர் அமெரிக்காவுக்குச் செல்கிறார்கள். படிப்பு மற்றும் வேலைவாய்ப்பு எனப் பல காரணங்களுக்காக அவர்கள் அமெரிக்கா செல்கிறார்கள். அப்படி அமெரிக்கா செல்வோர் எப்படியாவது கிரீன் கார்டு வாங்கிவிடவே துடிப்பார்கள். அதை ஒரு கவுரவமாகவே கருதுகிறார்கள்.
இது அமெரிக்கக் குடியுரிமைக்கான பாதையாகவும் பார்க்கப்படுகிறது. கிரீன் கார்டு கிரீன் கார்டு வைத்திருப்பவர்கள் அமெரிக்கக் குடிமகன்களாகக் கருதப்பட மாட்டார்கள் என்ற போதிலும், பல முக்கிய உரிமைகளை அவர்கள் அனுபவிக்கின்றனர். கிரீன் கார்டு பெறுவதற்குப் பல்வேறு வழிகள் இருக்கிறது. அதில் பலரும் ஷார்ட் கட்டாக பயன்படுத்தும் வழி- திருமணம்! அதாவது அமெரிக்கக் குடியுரிமை பெற்ற பெண் அல்லது ஆணை திருமணம் செய்து கொண்டால் எளிதாக கிரீன் கார்டு கிடைக்கும். இந்த வழியில் பலரும் கிரீன் கார்டு பெறுகிறார்கள். இருப்பினும், முறைகேடாக கிரீன் கார்டு பெறவே பலரும் கல்யாணம் செய்து கொள்வதாகப் புகார்கள் எழுந்தன. இந்தச் சூழலில் தான் டிரம்ப் நிர்வாகம் முக்கியமான ஒரு நடவடிக்கையை எடுத்துள்ளது. அதாவது அமெரிக்கக் குடிமகனைத் திருமணம் செய்வதால் மட்டுமே இனி கிரீன் கார்டுக்கு கிடைத்துவிடாது என்று குடியேற்ற வழக்கறிஞர் ஒருவர் எச்சரித்துள்ளார்.