இன்சாட் 3 டிஎஸ் உடன் இன்று மாலை விண்ணில் பாயும் ஜிஎஸ்எல்வி எப் 14

ஸ்ரீஹரிகோட்டா: பிப். 17: ஆந்திர மாநிலம், ஸ்ரீஹரிகோட்டாவில் உள்ள சதீஷ் தவான் ஏவுதளத்தில் இருந்து ஏவப்படும் ஜிஎஸ்எல்வி எஃப் 14 ராக்கெட்டை நாட்டி பாய் (Naughty Boy) என இஸ்ரோ விஞ்ஞானிகள் செல்லப் பெயரிட்டு அழைக்கிறார்கள்.
வானியல் முன்னறிவிப்புகளை முன் கூட்டியே பூமிக்கு தெரிவித்தால் அதனால் ஏற்படும் பாதிப்புகளையும் உயிரிழப்புகளையும் தடுக்கும் விதமாக இன்சாட் செயற்கைக்கோள்கள் தயாரிக்கப்பட்டு விண்ணுக்கு செலுத்தப்படுகிறது.
அந்த வகையில் ஏற்கெனவே 2013 இல் இன்சாட் 3டி செயற்கைகோளும் , 2016ஆம் ஆண்டு இன்சாட் 3 டிஎஆர் செயற்கைகோளும் விண்ணில் வட்டமடித்துக் கொண்டிருக்கின்றன. இவற்றின் ஆயுட்காலம் விரைவில் முடிவடைய போகிறது. இதனால் இந்த செயற்கைகோள்களுக்கு உதவிடும் நோக்கிலும் வானிலை மாற்றங்களை துல்லியமாக விவரிக்கும் நோக்கிலும் நவீன செயற்கைகோளான இன்சாட் 3 டிஎஸ் விண்ணுக்கு அனுப்பப்படுகிறது.
இதற்கான 27 மணி நேர கவுன்ட்டவுன் நேற்றைய தினம் தொடங்கியது. இந்த செயற்கைகோளை விண்ணுக்கு செலுத்துவதற்கான அத்தனை நடவடிக்கைகளும் எடுக்கப்பட்டு வருகிறது. செயற்கைகோள்களை விண்ணுக்கு செலுத்த ராக்கெட்டுகளின் பயன்பாடும் தேவையும் மிகவும் முக்கியமானது. இன்சாட் 3 டிஎஸ் செயற்கைகோள் 2,274 கிலோ எடை கொண்டது. இது விண்ணில் 10 ஆண்டுகள் நிலைநிறுத்தப்படுகிறது. இந்த செயற்கைகோள் விண்ணில் சென்ற 18 நிமிடங்களில் 36 ஆயிரம் கிலோ மீட்ட தூரத்தில் நீள்வட்ட சுற்றுப்பாதையில் நிலை நிறுத்தப்படும். இது செயல்படத் தொடங்கினால் நிலம் மற்றும் கடல் சார்ந்த வானிலை முன்னறிவிப்புகளை கொடுத்த வண்ணம் இருக்கும்.
இந்த செயற்கைகோள்கள் இடி, விமான போக்குவரத்தை எந்த நிலை வரை இயக்கலாம் என்பதை வழங்கும். அது போல் காட்டுத் தீ, புகை, பனி, பருவநிலை குறித்து ஆய்வுகளை நடத்தவும் வழிவகுக்கும். அந்த வகையில் இந்த இன்சாட் 3 டிஎஸ் செயற்கைகோளை விண்ணுக்கு சுமந்து செல்வது எந்த ராக்கெட் தெரியுமா- ஜிஎஸ்எல்வி எஃப் 14! இன்சாட் 3 டிஎஸ்ஸை கொண்டு செல்லும் இந்த ராக்கெட்டிற்கு இது 16 ஆவது திட்டமாகும். உள்நாட்டிலேயே தயாரிக்கப்பட்ட கிரையோஜெனிக் என்ஜினை பயன்படுத்தி செல்வது இது 10ஆவது முறையாகும்.
இன்சாட் 3டிஎஸ் இல்லாமல் ஏற்கெனவே 15 முறை விண்வெளி திட்டங்களுக்கு பயன்படுத்தப்பட்ட போதிலும் 6 மிஷன்களின் போது இந்த ராக்கெட் பிரச்சினைகளை சந்தித்தன. கடந்த ஆண்டு மே மாதம் கடைசியாக இந்த ராக்கெட் விண்வெளி திட்டத்தில் ஈடுபடுத்தப்பட்ட போது அது வெற்றியடைந்தாலும் அதன் பிறகு விண்ணுக்கு சென்ற போது தோல்வியை சந்தித்துள்ளது.