இன்றும் 2 தங்கம் 2 வெள்ளிதொடர் பதக்க வேட்டையில் இந்தியா

பெய்ஜிங் : அக்.27-
மாற்றுத்திறனாளிகளுக்கான ஆசிய பாரா விளையாட்டு போட்டி சீனாவின் ஹாங்சோவ் நகரில் நடந்து வருகிறது. 5-வது நாளான இன்றும் இந்திய வீரர், வீராங்கனைகள் பதக்கங்களை குவித்து வருகின்றனர். இந்த நிலையில், பாரா ஆசிய விளையாட்டில் வில்வித்தை போட்டியில் இந்தியாவின் ஷீதல் தங்கப்பதக்கம் வென்றார். ஏற்கனவே நேற்று கலப்பு காம்பவுண்ட் பிரிவில் தங்கம் வென்ற நிலையில், மகளிர் வில்வித்தை தனி நபர் பிரிவில் சிங்கப்பூரின் அலீம் நூர் என்பவரை வீழ்த்தி ஷீதல் தங்கம் வென்றார். இதைத் தொடர்ந்து 1,500 மீட்டர் ஓட்டப் பந்தயத்தில் இந்தியாவின் ராமன் சர்மாவும் தங்கம் வென்றார்.
1,500 மீட்டர் ஓட்டத்தில் 4.20 நிமிடங்களில் பந்தய தூரத்தை கடந்து ராமன் சர்மா தங்கப்பதக்கம் வென்றுள்ளார்.அதே போல் பேட்மிண்டனில் இந்திய வீரர் கிருஷ்ணா நாகர் வெள்ளிப் பதக்கம் வென்றார்.மேலும் ஈட்டி எறிதல் போட்டியில் இந்திய வீரர் பிரதீப் குமார் வெள்ளிப் பதக்கம் வென்ற நிலையில், அபிஷேக் சமோலி வெண்கலம் வென்றார். அதே போல் வட்டு எறிதல் போட்டியில் இந்திய வீராங்கனை லட்சுமி வெண்கலப் பதக்கத்தை தட்டிச் சென்றார். இந்தியா 88 பதக்கத்துடன் (20 தங்கம், 25 வெள்ளி, 43 வெண்கலம்) 8-வது இடத்தில் இருக்கிறது.