இன்று இரவு மேற்கு வங்கத்தில் கரையைக் கடக்கும் புயல்

டெல்லி: மே. 26 –
வங்கக் கடலில் உருவாகியுள்ள தீவிர புயலான ரெமல் எங்கே இருக்கிறது, எப்போது கரையை கடக்கும், இந்தியாவிற்கு பாதிப்பு இருக்கிறதா என்பதை எல்லாம் பார்ப்போம்.
வங்கக் கடலில் கடந்த 21 ஆம் தேதி குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி உருவானது. இது வடகிழக்கு திசையை நோக்கி நகர்ந்து ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு பகுதியாகவும் பிறகு கடந்த வெள்ளிக்கிழமை காற்றழுத்த தாழ்வு மண்டலமாகவும் இதைத் தொடர்ந்து ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலமாக மாறியது.
பின்னர் நேற்றைய தினம் ரெமல் புயலாக உருவான நிலையில் அது தீவிர புயலாகவும் இன்று மாறியது. இந்த புயல் வடகிழக்கு பகுதி, வங்கதேசம் ஆகிய பகுதிகளை தாக்கும் என கூறப்பட்டுள்ளது. இது இன்று இரவு மேற்கு வங்கத்தில் கரையை கடக்கிறது. இதனால் அதி கனமழையையும் தீவிர காற்றையும் வங்கதேசம், மேற்கு வங்க கடலோர பகுதிகளுக்கு கொடுக்கும் என தெரிகிறது. இந்த ரெமல் புயலால் கடுமையாக பாதிக்கும் பகுதிகளாக மேற்கு வங்கம், வங்கதேசத்தின் கடலோர பகுதிகள், திரிபுரா, வடகிழக்கு மாநிலங்களின் சில பகுதிகள் என அறியப்பட்டுள்ளன. அது போல் இந்தியாவில் இந்த புயல் எவ்வளவு நேரத்திற்கு பாதிப்பை ஏற்படுத்தும் என்பதை பார்த்த போது மே 28ஆம் தேதி வரை எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. ரெமல் புயல் கரையை கடக்கும் போது பாதிப்புகள் அதிகம் இருக்கும் என்பதால் இன்றும் நாளையும் கொல்கத்தா விமான நிலையம் மூடப்பட்டுள்ளது. இன்று வங்கக் கடலில் மணிக்கு 110 முதல் 120 கி.மீ. வேகத்திற்கு காற்று வீசும். இந்த புயல் இன்று நள்ளிரவு வங்கதேசம் மற்றும் மேற்கு வங்கத்திற்கு இடையே சாகர் தீவுகளுக்கும் கேபுபாராவுக்கும் இடையே கரையை கடக்கும் போது மணிக்கு 135 கி.மீ. வேகத்தில் கூட காற்று வீசும்.
புயல் பாதிப்பு எச்சரிக்கை விடுக்கப்பட்ட இடங்களில் எல்லாம் தேசிய பேரிடர் மீட்பு குழுவினர் தயார் நிலையில் உள்ளனர். தாழ்வான பகுதிகளில் வசிக்கும் மக்களை பாதுகாப்பாக வெளியேற்றியுள்ளனர். ரெமல் புயலுக்கு அரபிக் மொழியில் மணல் என்று அர்த்தம். இந்த புயல் எங்கே இருக்கிறது என்பதை பார்க்கலாம்.
இன்று காலை இந்திய வானிலை மையம் வெளியிட்ட அறிவிப்பின் படி மணிக்கு 6 கி.மீ. வேகத்தில் வடக்கு திசையை நோக்கி இந்த புயல் நகர்ந்து வருகிறது. இது தீவிர புயலாக மாறிவிட்டது. தற்போது வங்கதேசத்தின் கேபுபாராவுக்கு தெற்கு, தென் மேற்கு திசையில் 290 கி.மீ. தூரத்தில் மையம் கொண்டுள்ளது. அது போலோ வங்கதேசத்தின் மோங்கலா பகுதியில் தெற்கு திசையில் 330 கி.மீ. தூரத்திலும் மேற்கு வங்கத்தின் சாகர் தீவுகளுக்கு தெற்கு தென்கிழக்கு பகுதியில் 270 கி.மீ. தூரத்திலும் திஹா பகுதிக்கு தெற்கு தென்கிழக்கு பகுதியில் 310 கி.மீ. தூரத்திலும் இருக்கிறது. இது இன்று காலை 5.30 மணி நிலவரம் ஆகும். இந்த புயலால் மேற்கு வங்கம், வங்கதேசம் கடலில் 1.5 மீட்டர் உயரத்திற்கு கடல் அலைகள் உயரும். வடக்கு 24 பர்கானா, தெற்கு 24 பர்கானா ஆகிய பகுதிகளில் அதிக மழை பெய்யும் என்பதால் தீவிர கண்காணிப்பு உள்ளது. மீனவர்கள் யாரும் வடக்கு வங்கக் கடல் பகுதிக்கு நாளை காலை வரை மீன் பிடிக்க செல்ல வேண்டாம் என அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.