இன்று உலக புற்றுநோய் தினம்

டெல்லி: பிப்.5
மனிதர்களின் உடலில் உள்ள செல்கள் புதிதாக தோன்றுவதும், வளர்வதும், பிறகு பழைய செல்கள் இறப்பதும் தினந்தோறும் நடைபெறும் ஒரு இயற்கை மாற்றம். ஆனால், ஒரு சிலரின் உடலில் திடீரென செல்கள் கட்டுப்பாடின்றி வளர்வதும், தேவையற்ற புதிய செல்கள் தோன்றுவதும், பழைய செல்கள் இறக்காமல் தங்கி விடுவதும், அபரிமிதமான எண்ணிக்கையில் செல்களை ஒரே இடத்தில் ஒன்று சேர வழிவகுக்கும்.
இந்நிலைதான் மருத்துவத்தில் ‘புற்றுநோய்’ என அழைக்கப்படுகிறது. புற்றுநோய் என்பது மனித உடலின் எந்தப் பகுதியையும் பாதிக்கும் நோய். மனிதனின் வாழ்வியல் மாற்றம், உணவு பழக்கம், போதை பழக்கம், மரபணு மாற்றங்கள் உள்ளிட்ட பல்வேறு காரணத்தால் உலக அளவில் புற்றுநோய் பாதிப்பு அதிகரித்து வருகிறது. இதை கட்டுப்படுத்த உலக அளவில் பல்வேறு நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. மக்களிடையே போதுமான விழிப்புணர்வு இல்லாததால் புற்றுநோய் பாதிப்பு மற்றும் இறப்பு அதிகரித்து வருகிறது. இதனால் பொதுமக்களுக்கு புற்றுநோய் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்த இன்று (பிப்.4) உலக புற்றுநோய் விழிப்புணர்வு தினம் கடைபிடிக்கப்பட்டு வருகிறது. புற்றுநோய் குறித்து மக்களிடையே விழிப்புணர்வு ஏற்படுத்த சர்வதேச புற்றுநோய் கட்டுப்பாட்டு மையம் ஒவ்வொரு ஆண்டும் ஒரு கருப்பொருளை வைத்து விழிப்புணர்வு ஏற்படுத்தி வருகிறது. அதன்படி, இந்த ஆண்டு ‘ஒன்றாக இணைந்து, அதிகாரத்தில் இருப்பவர்களுக்கு சவால் விடுகிறோம்’ (Together, we challenge those in power) என்ற கருப்பொருளை வைத்து விழிப்புணர்வு ஏற்படுத்த திட்டமிட்டுள்ளது.

இந்நிலையில், இந்தியாவில் கடந்த சில ஆண்டுகளாக நுரையீரல் புற்றுநோய், வாய் புற்றுநோய், கர்ப்பப்பை வாய் புற்றுநோய், மார்பக புற்றுநோய் மற்றும் வயிறு தொடர்பாக புற்றுநோய், ரத்த புற்றுநோய் உள்ளிட்ட புற்றுநோய் இந்தியாவில் அதிகமாக பரவி வருவதாக மருத்துவர்கள் தெரிவிக்கின்றனர். இதுதொடர்பாக, ஓமந்தூரார் மருத்துவமனையின் புற்றுநோய் நிபுணர் பாலசுப்பிரமணியம் கூறியதாவது: பொதுவாக, தமிழ்நாட்டில் மட்டுமின்றி இந்தியாவில் பெண்கள் மார்பக புற்று நோய், கர்பப்பை வாய் புற்றுநோயால் அதிகமாக பாதிக்கப்படுகின்றனர். அதேபோல ஆண்கள் வாய் புற்றுநோய், நுரையீரல் புற்றுநோய், குடல் புற்றுநோயால் பாதிக்கப்படுகின்றனர். புற்றுநோய் 4 நிலையாக பிரிக்கப்படுகிறது. முதல் 2 நிலையின்போது சிகிச்சைக்கு வந்தால் விரைவில் குணப்படுத்தி விடலாம். ஆனால் பொதுமக்களிடையே போதுமான விழிப்புணர்வு இல்லை என்பதால் சிகிச்சைக்காக 3 அல்லது 4ம் நிலையின்போது சிகிச்சைக்காக வருகின்றனர். இதனால் அவர்களுக்கு போதுமான சிகிச்சை அளித்தாலும் அது உதவி இல்லாமல் போய்விடுகிறது.