இபிஎஸ் வருகை ஓபிஎஸ் கடும் எதிர்ப்பு

சென்னை: செப்டம்பர். 8 -அ.தி.மு.க.வில் ஒற்றைத் தலைமை வேண்டும் என்று எழுந்த கோரிக்கையால் ஈ.பி.எஸ்.-ஓ.பி.எஸ். இடையே மோதல் வெடித்தது. பெருவாரியான நிர்வாகிகளும், தொண்டர்களும் எடப்பாடி பழனிசாமிக்கு ஆதரவானார்கள். இதையடுத்து கடந்த ஜூலை 11-ந்தேதி எடப்பாடி பழனிசாமி தலைமையில் பொதுக்குழு கூட்டப்பட்டது. அந்த கூட்டத்தில் எடப்பாடி பழனிசாமி இடைக்கால பொதுச்செயலாளராக தேர்வு செய்யப்பட்டார். அதை ஏற்காததால் அன்றைய தினமே ஓ.பன்னீர்செல்வம் தனது ஆதரவாளர்களுடன் ராயப்பேட்டையில் உள்ள கட்சியின் தலைமை அலுவலகத்துக்குள் புகுந்தார். இதனால் பெரும் மோதல் ஏற்பட்டது.
இதையடுத்து அதிகாரிகள் தலைமை கழகத்தை பூட்டி சீல் வைத்தனர். இதை எதிர்த்து எடப்பாடி பழனிசாமி கோர்ட்டில் வழக்கு தொடர்ந்தார். அந்த வழக்கில் எடப்பாடி பழனிசாமிக்கு சாதகமாக தீர்ப்பு வந்தது. அலுவலக சாவி எடப்பாடி பழனிசாமியிடம் வழங்கப்பட்டது. அதே நேரம் பொதுக்குழு செல்லாது என்று தனி நீதிபதி தீர்ப்பளித்தார். அதை எதிர்த்து எடப்பாடி பழனிசாமி ஐகோர்ட்டில் மேல்முறையீடு செய்தார். அந்த வழக்கில் எடப்பாடி பழனிசாமிக்கு ஆதரவாக தீர்ப்பு வந்தது. இதனால் எடப்பாடி பழனிசாமி தரப்பினர் உற்சாகம் அடைந்தனர். 72 நாட்களுக்கு பிறகு இன்று எடப்பாடி பழனிசாமி தலைமைக் கழகம் செல்லவிருப்பதாக அறிவிக்கப்பட்டது.
இதையடுத்து அவரை வரவேற்பதற்கான ஏற்பாடுகள் களைகட்டியது. தலைமைக் கழகம் அமைந்து உள்ள ராயப்பேட்டை அவ்வை சண்முகம் சாலையில் இன்று காலையில் இருந்தே தொண்டர்கள் திரள தொடங்கினார்கள். மியூசிக் அகாடமி சிக்னலில் இருந்து லாயிட்ஸ் ரோடு சிக்னல் வரை கூட்டம் நிரம்பி வழிந்தது. வழி நெடுக தோரணங்கள், கட்சி கொடிகள் ஏராளமாக கட்டப்பட்டு இருந்தன. எடப்பாடி பழனிசாமி கார் வந்ததும் தொண்டர்கள் உற்சாகமாக கோஷம் எழுப்பினார்கள். கழகத்தை ‘கட்டிக்காத்த காவல் தெய்வம்’, ‘கழக பொதுச்செயலாளர்’ என்று முழங்கினார்கள். மக்கள் கூட்டத்தில் மிதந்தபடியே அவரது கார் வந்தது. ரோட்டின் இருபுறமும், தாரை தப்பட்டைகள் முழங்கியும், கரகாட்டம் போன்ற கலை நிகழ்ச்சிகளும் நடத்தப்பட்டன. ஏராளமானவர்கள் வரிசையாக நின்று திருஷ்டி பூசணிக்காய் சுற்றி உடைத்தனர். கார் தலைமை கழகத்தை அடைந்ததும் தலைமை கழக நிர்வாகிகள் பூங்கொத்து கொடுத்து வரவேற்றனர். பின்னர் எம்.ஜி.ஆர்., ஜெயலலிதா சிலைகளுக்கு மாலை அணிவித்துவிட்டு இனிப்புகள் வழங்கினார். அதன்பிறகு தலைமை கழகத்துக்குள் சென்று தனது அறையில் அமர்ந்து இருந்தார்.
கடந்த ஜூலை மாதம் 11-ந்தேதி அ.தி.மு.க. பொதுக்குழுவில் கட்சியின் இடைக்கால பொதுச்செயலாளராக எடப்பாடி பழனிசாமி தேர்ந்தெடுக்கப்பட்டார். அந்த நேரத்தில் சென்னை ராயப்பேட்டையில் உள்ள கட்சி தலைமை அலுவலகத்தில் ஓ.பன்னீர்செல்வம்-எடப்பாடி பழனிசாமி தரப்புக்கும் இடையே ஏற்பட்ட மோதலை தொடர்ந்து அலுவலகத்துக்கு ‘சீல்’ வைக்கப்பட்டது. பின்னர் ஐகோர்ட்டு உத்தரவின்படி அந்த ‘சீல்’ அகற்றப்பட்டு, சாவி எடப்பாடி பழனிசாமி தரப்பிடம் ஒப்படைக்கப்பட்டது. இருப்பினும் அவர் தலைமை அலுவலகத்திற்கு வரவில்லை. இந்த நிலையில் அவர் இன்று கட்சி அலுவலகத்திற்கு வருகிறார். காலை 10 மணிக்கு கட்சி அலுவலகம் வரும் எடப்பாடி பழனிசாமி அங்குள்ள எம்.ஜி.ஆர், ஜெயலலிதா சிலைகளுக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்துகிறார். இந்நிலையில், எடப்பாடி பழனிசாமி அதிமுக அலுவலகம் செல்ல அனுமதிக்க கூடாது என டிஜிபியிடம் ஓ. பன்னீர் செல்வம் தரப்பில் புகழேந்தி புகார் மனு கொடுத்துள்ளார். இது தொடர்பாக அவர் அளித்த புகார் மனுவில் சிபிசிஐடி விசாரணை, சுப்ரீம் கோர்ட்டில் வழக்கு நிலுவையில் இருப்பதால் எடப்பாடி பழனிசாமி மற்றும் அவரது ஆதரவாளர்களை அதிமுக அலுவகத்தில் அனுமதிக்க கூடாது என புகழேந்தி புகார் கொடுத்துள்ளார்.